Published : 04 Feb 2025 11:27 AM
Last Updated : 04 Feb 2025 11:27 AM

கனடா, மெக்சிகோ மீதான 25% வரிவிதிப்பு தற்காலிக நிறுத்தம்: ட்ரம்ப் முடிவுக்கு காரணம் என்ன?

மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதே போல மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் அமெரிக்காவின் வரிவிதிப்புகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். திடீரென ட்ரம்ப் தனது முடிவை மாற்றிக் கொள்ள காரணம் என்னவென்று பார்ப்போம்.

மெக்சிகோ அளித்த உறுதி: மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள்ள சட்டவிரோதமாகக் குடியேறுவோரை தடுக்க எல்லையில் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்த அந்நாட்டு அதிபர் ஒப்புக் கொண்டுள்ளார். ட்ரம்ப் - மெக்சிகோ அதிபர் கிளாடியாவும் தொலைபேசி உரையாடலில் இப்பிரச்சினை சுமுகத் தீர்வு எட்டப்பட்டதாகவும். அதன் அடிப்படையிலேயே தற்போது ட்ரம்ப் தனது முடிவில் தளர்வு காட்டியுள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து ட்ரம்ப், “அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் உடனடியாக 10,000 ராணுவ வீரர்களை நிறுத்துவதற்கு கிளாடியா ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வீரர்கள் எங்கள் நாட்டில் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளை தடுத்து நிறுத்துவார்கள். மேலும் 25 சதவீத வரிவிதிப்பை தற்காலிகமாக ஒரு மாதகாலம் நிறுத்திவைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ‘ஒப்பந்தம்’ நிறைவேறும் வரையில் பேச்சுவார்த்தை தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

கனடாவின் எல்லை பாதுகாப்பு திட்டம்: இதே போல் கனடா நாட்டுப் பிரதமர் ட்ரூடோ எக்ஸ் பக்கத்தில், நானும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்தது. கனடா எல்லைத் திட்டத்தை 1.3 பில்லியன் டாலர் செலவில் அமல்படுத்தவுள்ளது. எல்லையில் புதிய ஹெலிகாப்டர்கள், நவீன தொழில்நுட்பம், கூடுதல் வீரர்களுடன் பாதுகாப்பை தீவிரப்படுத்தவுள்ளோம், இதன்மூலம் ஃபெண்டானில் போதைப் பொருள் கடத்தல் தடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.

இது குறித்து ட்ரம்ப், “கனடா வடக்கு எல்லையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இதன்மூலம் ஆபத்தான ஃபெண்டானில் போதைப் பொருள் அமெரிக்காவுக்குள் நுழைவது கட்டுப்படுத்தப்படும். அந்த போதைப் பொருளால் அமெரிக்காவில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.” என்று கூறியுள்ளார்.

சீன நிலவரம் என்ன? கனடா, மெக்சிகோ மீதான நடவடிக்கை தற்காலிக நிறுத்தம் என்று ட்ரம்ப் சொல்லியிருந்தாலும் கூட சீனா பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. , சீனா பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியிருந்ததால், அது அமலுக்கு வரும் என்றே தெரிகிறது. இந்நிலையில் சீன அதிபருடன் ட்ரம்ப் விரைவில் பேசவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x