Published : 25 Jan 2025 04:36 PM
Last Updated : 25 Jan 2025 04:36 PM
காசா: ஹமாஸ் வசம் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீராங்கனைகள் 4 பேர், காசாவில் செஞ்சிலுவைச் சங்கம் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதில், காசாவில் 47,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஓராண்டு காலத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் மேற்கொண்ட தீவிர முயற்சியை அடுத்து, சமீபத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் தனது பிடியில் இருந்த 3 இஸ்ரேலிய பெண்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுவித்தது. இதற்கு பதிலாக, இஸ்ரேல், 90 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.
இதன் தொடர்ச்சியாக, கரினா அரியேவ், டேனியல்லா கில்போவா, நாம லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய இஸ்ரேலிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீராங்கனைகள் இன்று விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் அறிவித்திருந்தது. அதன்படி, காசாவில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் வசம் 4 பேரும் இன்று (சனிக்கிழமை) ஒப்படைக்கப்பட்டனர்.
காசா போர் நிறுத்தத்தின் ஆறு வார முதல் கட்டத்தில், விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு பெண் ராணுவ வீரருக்கும் ஈடாக 50 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, நான்கு பேருக்கு ஈடாக 200 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். செஞ்சிலுவைச் சங்கம் அவர்களை இஸ்ரேலியப் படைகளிடம் ஒப்படைக்கும். அவர்கள், ஆரம்ப மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். பின்னர், அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர்வார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT