Published : 25 Jan 2025 02:00 PM
Last Updated : 25 Jan 2025 02:00 PM
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் துணைச் செய்தித் தொடர்பாளராக (Deputy Press Secretary) இந்திய வம்சாவளியைச் சேரந்த முன்னாள் பத்திரிகையாளர் குஷ் தேசாயை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
முன்னதாக குஷ் தேசாய், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு நிகழ்வின் துணை செய்தித் தொடர்பாளராகவும் லோவா குடியரசுக் கட்சியின் செய்தித் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
அதேபோல் தேசாய், போட்டிகள் நிறைந்த மாநிலங்கள் (Battleground States) மற்றும் பென்சில்வேனியா குடியரசுக் கட்சி தேசிய குழுவின் துணை செய்தித் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்தப் பணியில், போட்டிகள் நிறைந்த மாநிலங்கள் குறிப்பாக பென்சில்வேனியாவில், செய்திகள் மற்றும் பிரச்சாரங்களைக் கட்டமைப்பது போன்ற முக்கிய பங்காற்றினார்.
இந்தத் தேர்தலில் போட்டிகள் நிறைந்த 7 மாநிலங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தேசாயின் நியமனத்தை வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை அறிவித்தது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அலுவகம், வெள்ளை மாளிகை துணை தலைமை பணியாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் டைலர் புடோவிச்-ஆல் மேற்பார்வையிடப்படுகிறது.
முன்னதாக அதிபர் ட்ரம்ப், அதிபரின் உதவியாளராகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு இயக்குநராகவும் ஸ்டீவன் செயுங் மற்றும் அதிபரின் உதவியாளர் மற்றும் செய்தித் தொடர்பாளராக கரோலின் லேவிட் ஆகியோரின் நியமனங்களை அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT