Published : 25 Jan 2025 12:19 PM
Last Updated : 25 Jan 2025 12:19 PM
வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கடந்த திங்கள் கிழமை ட்ரம்ப் பிறப்பித்ததாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது. வேறு எந்த நாட்டையும்விட அதிக நிதி உதவி அளிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. இதற்காக அந்த நாடு தனது பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வருகிறது. கடந்த 2023-ல் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோறாயமாக ரூ.5.17 லட்சம் கோடி) அல்லது அந்நாட்டின் பட்ஜெட்டில் சுமார் 1% ஒதுக்கப்பட்டது.
சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நிதியுதவியை விரைவாக நிறுத்த உத்தரவிட்டிருப்பதால், பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.
அதேநேரத்தில், இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான அவசர உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், உக்ரைனுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் இல்லை. மேலும், சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டத்துக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மக்களுக்கு உணவளிக்க முடியும்.
மருத்துவமனைகள் மற்றும் நோய்த்தடுப்பு திட்டங்கள் போன்ற உயிர்காக்கும் சுகாதாரத் திட்டங்களுக்கு விலக்கு அளிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கான அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உலகளவில் பாராட்டப்பட்ட எச்ஐவி எதிர்ப்புத் திட்டமான, PEPFAR-க்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியும் நிறுத்தப்பட இருக்கிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் இத்திட்டத்தை தொடங்கினார். அதிலிருந்து, இத்திட்டத்தின் மூலம் 55 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் உட்பட 2.5 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT