Published : 25 Jan 2025 05:46 AM
Last Updated : 25 Jan 2025 05:46 AM

அமெரிக்காவில் இதுவரை சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது: 18,000 இந்தியர்களை வெளியேற்ற முடிவு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.

கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில் 78 முக்கிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களில் குற்ற பின்னணி உடையவர்களை கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் ஜாமீனில் விடுதலையாகி உள்ள வெளிநாட்டினர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் அமெரிக்கா முழுவதும் 538 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த சில மாதங்களில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதன்படி நூற்றுக்கணக்கானோர் மெக்ஸிகோவுக்கு நாடு கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மெக்ஸிகோ அரசு வட்டாரங்கள் கூறும்போது, "அமெரிக்காவில் ஆவணங்கள் இன்றி வசிக்கும் மெக்ஸிகோ மக்கள், விமானம் மற்றும் பேருந்துகளில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்காக எல்லைப் பகுதிகளில் 9 சிறப்பு முகாம்களை அமைத்து உள்ளோம். ஒவ்வொரு முகாமில் 2,500-க்கும் மேற்பட்டோரை தங்க வைக்க முடியும். மெக்ஸிகோ குடிமக்களை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம். வெளிநாட்டினரை எங்கள் நாட்டுக்கு அனுப்பினால் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பி விடுவோம்" என்று தெரிவித்தன.

18,000 இந்தியர்கள்: அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக மெக்ஸிகோ நாட்டினர் ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 28 லட்சம் பேரும், சீனாவை சேர்ந்த 22 லட்சம் பேரும், பிலிப்பைன்ஸை சேர்ந்த 14 லட்சம் பேரும், எல் சல்வடாரை சேர்ந்த 14 லட்சம் பேரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர்.

முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உடனடியாக அவரவர் நாடுகளுக்கு கடத்தப்படுவார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர். அவர்களை திரும்ப அழைத்து கொள்ள இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்டுமான துறைக்கு பாதிப்பு: அமெரிக்க கட்டுமானத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவின் கட்டுமானத் துறையில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டினர் ஆவர். அவர்களில் பெரும்பாலானோரிடம் முறையான ஆவணங்கள் கிடையாது. வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டால் அமெரிக்காவின் கட்டுமானத் துறை மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.

கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு 20,000-க்கும் மேற்பட்ட பெரிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமாகி உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை மீண்டும் கட்டியெழுப்ப கட்டுமானத் தொழிலாளர்கள் அதிக அளவில் தேவை. அதிபர் ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இவ்வாறு அமெரிக்க கட்டுமான துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திரும்ப அழைத்து கொள்ள இந்தியா தயார்: இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று கூறியதாவது: சட்டவிரோத குடியேற்றத்தை இந்தியா மிகக் கடுமையாக எதிர்க்கிறது. இது கிரிமினல் குற்றம் ஆகும். அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி வசிக்கும் இந்தியர்கள் திரும்ப அழைத்து கொள்ளப்படுவார்கள். அவர்கள் தாங்கள் இந்தியர்கள் என்பதற்கான சான்றுகளை வழங்க வேண்டும். அமெரிக்காவில் எத்தனை இந்தியர்கள் ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து கொள்வது தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x