Published : 24 Jan 2025 08:34 PM
Last Updated : 24 Jan 2025 08:34 PM

புகைப் பழக்கத்தை கைவிட வித்தியாச உக்தியை கையாண்ட நபரின் கதை!

புதுடெல்லி: புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான துருக்கியைச் சேர்ந்த நபர் ஒருவர், அதை கைவிட ஒரு வித்தியாசமான உக்தியை கையாண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

துருக்கியைச் சேர்ந்த இப்ராஹிம் யூசெல் என்பவர் பல ஆண்டுகளாக புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். எத்தனையோ முயற்சிகளை செய்தும் அவரால், அந்த கெட்ட பழக்கத்திலிருந்து மீள முடியவில்லை. குறிப்பாக, 2013-ஆம் ஆண்டில் தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளையும் சர்வ சாதாரணமாக குடித்துவந்துள்ளார். இந்த விசியம் அவரின் குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்கள் அப்பழக்கத்தை கைவிடுமாறு அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளனர்.

இவரும் தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலின்பேரில், புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட பல முயற்சிகளை மேற்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும், தனது மூன்று குழந்தைகளின் பிறந்தநாள் மற்றும் தனது திருமண நாளில், அவர் புகைபிடிப்பதை விட்டுவிடுவதாக உறுதியளித்தார், ஆனால் சில நாட்கள் மட்டுமே புகைபிடிக்காமல் இருக்க முடிந்தது.

கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக புகைபிடித்து வந்த இப்ராஹிம் யூசெல், உலோகத்தினால் செய்யப்பட்ட கூண்டு வடிவ தலைக் கவசத்தால் தனது தலையை மூட முடிவு செய்தார். அப்போதாவது, அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும் என்கிற விருப்பத்தில் அவ்வாறு செய்தார். தற்போது அது குறித்த படங்கள் வெளியாக பேசுபொருளாக மாறியுள்ளது. அவரின் மனைவியிடம் சாவி இருப்பதாகவும், சாப்பிட, தண்ணீர் குடிக்கும்போது மட்டும் அவர் அதை திறந்துவிடுவதாகவும் தெரிகிறது. அவர் புகைபிடிப்பதை விட்டுவிட்டாரா இல்லையா என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

உடல் நலத்துக்கு கேடு: எந்த வகையான போதைப் பழக்கமும் மோசமானதுதான். புகைப் பிடிக்கும் பழக்கம் மிகவும் மோசமானது. குறிப்பாக, நுரையீரல், இதயம் மற்றும் ஒட்டுமொத்த சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. புகைப்பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று தெரிந்திருந்தும், இந்தப் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சத்துக்கு அதிகமான மக்கள் புகையிலை பயன்பாட்டால் இறக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x