Published : 24 Jan 2025 06:33 PM
Last Updated : 24 Jan 2025 06:33 PM

ட்ரம்ப் உடன் பேச புதின் தயார்; அழைப்புக்கு காத்திருக்கிறோம் - ரஷ்யா தகவல்

மாஸ்கோ: “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ அழைப்புக்காக காத்திருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக விரைவில் புதினை சந்திக்க விரும்புவதாக கடந்த வியாழக்கிழமை ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், அணு ஆயுதங்களை குறைக்கும் நோக்கில் பணியாற்ற விரும்புவதாகவும் கூறி இருந்தார். முன்னதாக, உக்ரைனில் நடைபெற்று வரும் 'அபத்தமான போரை' முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் அல்லது அதிக வரிகள் மற்றும் கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் ரஷ்யாவை எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, புதினும் டிரம்பும் தொலைபேசி மூலம் உரையாட வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஆழமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான நேரடி சந்திப்புக்கு முன்னதாக ஒரு தொலைபேசி உரையாடல் மிகவும் அவசியம். ட்ரம்ப் உடன் தொலைபேசியில் உரையாட புதின் தயாராக இருக்கிறார். (வாஷிங்டனின்) சிக்னல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

வியாழக்கிழமை டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய ட்ரம்ப், "அணு ஆயுதக் குறைப்பை நாங்கள் காண விரும்புகிறோம். அணு ஆயுதங்களை குறைக்கும் யோசனையை அதிபர் புதின் மிகவும் விரும்பினார் என்று நான் உங்களுக்குச் சொல்வேன். உலகின் பிற பகுதிகளும் அவர்களைப் பின்பற்றச் செய்திருப்போம். சீனாவும் உடன்பட்டிருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "அணு ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தைகளை விரைவில் மீண்டும் தொடங்க விரும்புவதாக புதின் தெளிவுபடுத்தி உள்ளார். ஆனால், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உட்பட பிற நாடுகளின் அணு ஆயுதங்களையும் குறைக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் பரந்த அளவில் இருக்க வேண்டும். எனவே, பேசுவதற்கு ஏதோ இருக்கிறது, நாம் பேச வேண்டும். பல விஷயங்களில் நேரம் கடந்துவிட்டது. இது தொடர்பான எங்கள் ஆர்வத்தை நாங்கள் முன்பே தெரிவித்திருக்கிறோம். எனவே, இது விஷயத்தில் அமெரிக்காதான் முடிவு எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் ரஷ்யாவும் பயன்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையையும், அவற்றை பயன்படுத்துவதற்கான ஏவுகணைகள் மற்றும் குண்டுவீசும் விமானங்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்துவதற்கான ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் பிப்ரவரி 5, 2026 அன்று காலாவதியாக உள்ளது. எனவே, உலகின் இரண்டு பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த உள்ள கடைசி வாய்ப்பாக இந்தப் பேச்சுவார்த்தை கருதப்படுகிறது.

இதனிடையே, “சவுதி அரேபியா மற்றும் பிற பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு நாடுகளுக்கு, எண்ணெய் விலைகளைக் குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்கள் விலையை குறைப்பதில் நாட்டம் செலுத்தவில்லை. இதுவும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. விலை குறைந்தால், ரஷ்யா - உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வரும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x