Published : 24 Jan 2025 02:14 AM
Last Updated : 24 Jan 2025 02:14 AM
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றால் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு ஆயுத, நிதியுதவியை தாராளமாக வழங்கி வந்தார். புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் உக்ரைனுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்று கூறி வருகிறார். இந்த சூழலில் ரஷ்யா, உக்ரைன் போர் தொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது:
அமெரிக்காவில் வலுவான அதிபர் பதவியில் இருந்திருந்தால் ரஷ்யா- உக்ரைன் இடையே போர் ஏற்பட்டிருக்காது. எனது ஆட்சிக் காலத்தில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா தயங்கும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். இல்லையெனில் அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.
உக்ரைன் போரால் ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக உக்ரைனுக்கான உதவியை ஐரோப்பிய நாடுகள் குறைத்து உள்ளன. அமெரிக்கா சார்பில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அனுப்புவதா, வேண்டாமா என்பது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதியை விரும்புகிறார். இந்த நேரத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இவ்வாறு டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புதினுடன் விரைவில் பேச்சு: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விரைவில் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ரஷ்ய அதிபர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அண்மையில் தொலைபேசி வாயிலாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1.35 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் விவகாரம், அமெரிக்கா உடனான உறவு குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT