Published : 24 Jan 2025 02:04 AM
Last Updated : 24 Jan 2025 02:04 AM

குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினரை சிறையில் அடைக்க உத்தரவு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கி ஜாமீனில் விடுதலையான சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக சிறையில் அடைக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில் 78 முக்கிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினரை சிறையில் அடைக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 308 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. புதிய மசோதாவுக்கு லேகன் ரிலே என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், ஏதேன்ஸ் நகரில் லேகன் ரிலே (22) என்ற நர்சிங் மாணவி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெனிசூலாவை சேர்ந்த ஜோஸ் அன்தோனியோ இபாரா (26) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். திருட்டு முயற்சியின்போது நர்சிங் மாணவி லேகன் ரிலேவை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதுபோல் அமெரிக்கா முழுவதும் சட்டவிரோத குடியேறிகள் கொடூர சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் ஜாமீன் பெற்று சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். அவர்கள் ஜாமீனில் விடுதலையாவதை தடுத்து தொடர்ந்து சிறையில் அடைக்க வகை செய்யும் மசோதா கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய மசோதாவுக்கு லேகன் ரிலே என்று பெயரிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் மசோதா அமல் செய்யப்படாமல் இருந்தது. கடந்த 7-ம் தேதி திருத்தங்களுடன் லேகன் ரிலே மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதும் மேலும் பல்வேறு திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் லேகன் ரிலோ மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதிபர் ட்ரம்ப் கையெழுத்திடும் முதல் மசோதாவாக இது இருக்கும். லேகன் ரிலே மசோதா அமலுக்கு வருவதற்கு முன்பாகவே குற்ற சம்பவங்களில் தொடர்புடைய சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி ஜாமீனில் வெளியே இருக்கும் வெளிநாட்டினர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் மெக்ஸிகோ நாட்டினர் மட்டும் 1.07 கோடி பேர் உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 28 லட்சம் பேரும், சீனாவை சேர்ந்த 22 லட்சம் பேரும், பிலிப்பைன்ஸை சேர்ந்த 20 லட்சம் பேரும், எல் சல்வடாரை சேர்ந்த 14 லட்சம் பேரும் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். அவர்களில் 7 லட்சம் பேர் அமெரிக்க சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிகிறது. அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்.

இவ்வாறு அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிறப்பு குடியுரிமை விவகாரம்: அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை ரத்து செய்யப்படும் என்று புதிய அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த 30 நாட்களில் பிறப்பு அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளது.

இதை எதிர்த்து 22 மாகாணங்கள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. சமூக நல அமைப்புகளும் அதிபர் ட்ரம்ப் முடிவுக்கு எதிராக வழக்குகளை தொடுத்துள்ளன. இதில் சியாட்டிலில் உள்ள நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை தொடங்கப்பட இருக்கிறது.

அதிபர் ட்ரம்பின் முடிவு குறித்து இந்திய வம்சாவளியினர் கூறும்போது, “பிறப்பு குடியுரிமை சட்டத்தின் மூலம் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்திருக்கிறது. அதிபர் ட்ரம்பின் முடிவால் இந்தியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதிபரின் முடிவை எதிர்த்து இந்திய வம்சாவளியினர் சார்ந்த சமூக நல அமைப்புகள், நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன" என்று தெரிவித்தனர்.

நியூஜெர்ஸி அட்டர்னி ஜெனரல் மேத்யூ கூறும்போது, “அதிபர் ட்ரம்புக்கு அதிக அதிகாரங்கள் இருக்கலாம். ஆனால் அவர் மன்னர் கிடையாது. ஒரு கையெழுத்தால் அமெரிக்க அரசியலமைப்பை மாற்றிவிட முடியாது. அதிபரின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் சட்டரீதியாக போராடுவோம்" என்று தெரிவித்தார்.

எல்லையில் படைகள் குவிப்பு: பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவது வழக்கம். தற்போதும் மெக்ஸிகோ எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் முகாமிட்டு உள்ளனர். அவர்களை அமெரிக்காவுக்குள் நுழையவிடாமல் தடுக்க எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படையில் இருந்து கூடுதல் வீரர்களை மெக்ஸிகோ எல்லைக்கு அனுப்ப அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில வாரங்களில் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த முயன்ற 5,000 பேர் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்படுவர் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x