Published : 23 Jan 2025 04:48 PM
Last Updated : 23 Jan 2025 04:48 PM
பாங்காக்: தென்கிழக்கு ஆசியாவிலேயே தன்பாலின திருமணச் சட்டத்தை அங்கீகரித்த முதல் நாடாக தாய்லாந்து மாறியுள்ள நிலையில், இன்று நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான எல்ஜிபிடிக்யூ+ ஜோடிகள் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொள்கின்றனர்.
தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்து அரசு கடந்த வருடம் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து, இந்தச் சட்டம் இன்று (ஜன.23) அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்தின் செனட் சபை ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து அந்த மசோதா, மன்னர் மகா வஜிரலங்கோனின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டது. அதன்பின், தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் தென்கிழக்காசிய நாடு என்ற பெருமையைத் தாய்லாந்து பெற்றுள்ளது. தன் பாலினத் திருமணத்தை ஏற்கும் மூன்றாவது ஆசிய நாடு தாய்லாந்து ஆகும். தைவானும் நேபாளமும் ஏற்கெனவே அத்தகைய திருமணங்களை அங்கீகரித்து வருகின்றன.
பொதுவாகவே மாவட்ட அலுவலகங்களில்தான் திருமணங்கள் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இன்று, மத்திய பாங்காக்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் ஒரு நாள் முழுவதும் நடைபெறும் நிகழ்வில் சுமார் 300 ஜோடிகள் தாங்கள் திருமணத்தை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் தங்களது திருமணத்தை அதிகாரபூர்மகாக பதிவு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து, பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா தலைநகர் பாங்காக்கில் நடந்த ஒரு திருமணத்தில் பேசும்போது, “இந்த தன்பாலின திருமணச் சட்டம் பாலின பன்முகத்தன்மை குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும். இச்சட்டம் பாலியல் பாகுபாடு, இனம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் அரவணைக்கிறது. அனைவருக்குமான சம உரிமை மற்றும் கண்ணியத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என்றார்.
மேலும், இது குறித்து ரியல் எஸ்டேட் உரிமையாளரான குள்ளயாஹ்நட் என்பவர் கூறும்போது, “தன்பாலின திருமணச் சட்டம் என்பது நமது பாலினத்தைப் பொருட்படுத்தாமல், அனைவரும் ஒரே மாதிரியான அடிப்படை மனித உரிமைகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதற்கு சான்றாகும்," என்றார். மற்றொரு தம்பதியர், “நாங்கள் பெரிதாக எதையும் கேட்கவில்லை... எளிமையான, மகிழ்ச்சியான ஒரு குடும்ப வாழ்க்கையை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.
இதைத் தொடர்ந்து ருங்டிவா என்ற பெண் கூறும்போது, “இந்த நாளுக்காகதான் நாங்கள் மிக நீண்ட காலமாகக் காத்திருந்தோம். இப்போது மகிழ்ச்சியடைகிறேன், உற்சாகமாக இருக்கிறேன். 20 ஆண்டுகளாக, நாங்கள் ஒருவரையொருவர் நேசித்து வருகிறோம். ஆனால், சமூகத்திடமிருந்து மறைக்க வேண்டியிருந்தது. ஆனால், இனி நாங்கள் பெருமையுடன் வெளியே போக முடியும்” என்றார்.
இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம், தாய்லாந்தில் உள்ள ஒரே பாலின தம்பதிகள் இப்போது திருமணம் செய்து கொள்ளவும், தங்கள் சொத்துகளைப் பெறவும், குழந்தைகளைத் தத்தெடுக்கவும் சம உரிமைகளைப் பெறுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT