Published : 23 Jan 2025 02:49 AM
Last Updated : 23 Jan 2025 02:49 AM
வாஷிங்டன்: அமெரிக்காவின் வளர்ச்சிக்கு மிகவும் திறமையான வெளிநாட்டினரின் பங்களிப்பு தேவை என்பதால் எச்1பி விசா நடைமுறையை நிறுத்த விரும்பவில்லை என்று புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், வெள்ளை மாளிகையில், ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லாரி எல்லிஸன், சாப்ட்பேங்க் சிஇஓ மசயோசி சன், ஓப்பன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது ட்ரம்ப் கூறியதாவது: அமெரிக்காவுக்கு மிகவும் திறமை வாய்ந்த இளைஞர்கள் தேவை. நான் பொறியாளர்களை பற்றி மட்டும் பேசவில்லை.
எல்லா மட்டத்திலும் உள்ள மக்களைப் பற்றி பேசுகிறேன். தொழில்நுட்பத் துறை மட்டுமின்றி பிற வேலைகளுக்கும் திறமையான உயர்தர பணியாளர்களுக்கு எச்1பி விசா என்பது மிக அவசியமாக உள்ளது. தகுதி இல்லாத மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இந்த விசாவின் நோக்கம் என்றாலும் அதிக திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும், எலான் மஸ்க், லாரி, மயோசி போன்ற தொழில்நுட்பத் துறை தலைவர்களின் விருப்பமும் கூட.
வணிக விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் அதேவேளையில் குடியேற்றத்தில் தரத்தை பேணுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். எச்1பி விசா திட்டம் நாட்டுக்கு விதிவிலக்கான திறமைகளை கொண்டு வருவதற்கான முக்கிய வழியாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ மேம்பாட்டுக்காக 500 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது.
புதிதாக தொடங்கப்படும் நிறுவனத்தின் மூலமாக இந்த முதலீடு மேற்கொள்ளப்படும். இந்த புதிய நிறுவனம், ஆரக்கிள், சாப்ட்பேங்க் மற்றும் ஓப்பன் ஏஐ நிறுவனங்களுடன் பங்குதாரராக இணைந்து செயல்படும். ஸ்டார்கேட் என்று அழைக்கப்படும் இந்த முன்முயற்சியானது யுஎஸ் டேட்டா சென்டர்களில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டை கணிசமாக அதிகரிக்கும்.
காசா முனைப் பகுதியில் கடந்த 15 மாதங்களாக நிகழ்ந்த ரத்தக்களறி சம்பவங்களுக்கு தற்போது முடிவுகட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் என்னால்தான் சாத்தியமானது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இருதரப்பில் இருந்தும் பிணைக் கைதிகள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
நான் மட்டும் இங்கு இல்லை என்றால் பிணைக் கைதிகள் தங்களது குடும்பத்தினரை மீண்டும் சந்தித்திருக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரும் இறந்திருப்பார்கள். இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை பைடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால்கூட அது ஒருபோதும் நிறைவேற்றப்பட்டு இருக்காது என்பதே வெளிப்படையான உண்மை.
பலவீனமான தலைமையால் பெரும் பேரழிவு ஏற்பட்டுவிட்டது. மிக இளம் வயதில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை பறிகொடுத்து விட்டோம். இதற்கு ஆரம்ப புள்ளி ஹமாஸ், இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதல்தான். எனவே, மீண்டும் அதுபோல் இனி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
குடியுரிமை விவகாரம்: அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதை எதிர்த்து ஜனநாயக கட்சி தலைமையிலான 22 மாகாணங்கள் சார்பில் பாஸ்டன் மற்றும் சியாட்டிலில் உள்ள ஃபெடரல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. சிவில் உரிமை குழுக்களின் கூட்டணி சார்பாகவும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அமெரிக்க மண்ணில் பிறந்த எவருக்கும் தானாக குடியுரிமை வழங்குவதை அகற்ற முயற்சிப்பதன் மூலம் அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரத்தையும், அமெரிக்க அரசியலமைப்பையும் மீறி செயல்பட்டுள்ளதாக கூறி இந்த வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. இந்த உத்தரவால் அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிறக்கும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு குடியுரிமையை மறுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக மாசசூசெட்ஸ் அட்டர்னி ஜெனரல் ஆண்ட்ரியா ஜாய் கேம்ப்பெல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்புக்கு வெளியுறவுத் துறை முயற்சி: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், அந்நாடு உடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் திறமையான தொழிலாளர்களுக்கு எளிதில் விசா கிடைக்கச் செய்வதிலும் இந்தியா ஆர்வமாக உள்ளது. கடந்தாண்டில் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் 118 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இந்நிலையில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குறிப்பிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கும் அதேபோல் வரி விதிக்கப்படும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் விரைவில் சந்தித்து பேசினால் வரி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும், அமெரிக்க முதலீடுகளை ஈர்க்க உதவும் எனவும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர். அடுத்த மாதம் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்ய இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த சந்திப்புக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT