Published : 23 Jan 2025 01:42 AM
Last Updated : 23 Jan 2025 01:42 AM

ஹிஸ்புல்லா மூத்த தலைவர் ஷேக் முகமது ஹமாடி சுட்டுக்கொலை

கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரும் உள்ளூர் தளபதியுமான ஷேக் முகமது அலி ஹமாடி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து 'இஸ்ரேல் டைம்ஸ்' நேற்று வெளியிட்ட செய்தியில், மேற்கு பெக்கா மாவட்டத்தின் மச்காரா பகுதியில் ஹமாடி தனது வீட்டுக்கு அருகில் துப்பாக்கியால் 6 முறை சுடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த ஹமாடி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

ஹமாடியின் கொலைக்கு பல வருட குடும்ப சண்டை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து லெபனான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏதென்ஸ் நகரில் இருந்து ரோம் நோக்கி 153 பேருடன் சென்ற ஒரு விமானத்தை கடத்தியதற்காக அமெரிக்க விசாரணை அமைப்பின் (எப்.பி.ஐ) தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் ஹமாடியும் இருந்தார்.

இஸ்ரேஸ் - ஹிஸ்புல்லா இடையே ஆரம்பகட்ட 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அது முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் தனது படைகளை ஜனவரி 26-ம் தேதிக்குள் தெற்கு லெபனானில் இருந்து திரும்பப் பெற வேண்டும். இஸ்ரேஸ் எல்லையிலிருந்து லிட்டானி ஆற்றின் வடக்கே ஹில்புல்லா பின்வாங்க வேண்டும்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலில் இஸ்ரேலில் 130-க்கும் மேற்பட்டோரும் லெபனானில் 3,700-க்கும் மேற்பட்டோரும் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x