Published : 23 Jan 2025 01:20 AM
Last Updated : 23 Jan 2025 01:20 AM
புதிய ட்ரம்ப் நிர்வாகம் பதியேற்றவுடன் அமெரிக்கா, இந்தியாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் தங்களின் முதல் இருதரப்பு சந்திப்பை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் நடத்தினர்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்கச் சென்ற எஸ்.ஜெய்சங்கர் வாஷிங்டனில் உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபியோ பதவியேற்ற ஒரு மணி நேரத்துக்குள் தனது முதல் இருதரப்பு சந்திப்பை எஸ்.ஜெய்சங்கருடன் நடத்தினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் தொடர்பாக இருவரும் விரிவான ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா உடனிருந்தார்.
உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகளை பிரதிநித்துவம் செய்யும் இவ்விருவர் இடையிலான சந்திப்பு அமெரிக்க வெளியுறவு அமைச்சக தலைமையகத்தில் நடைபெற்றது.
அமெரிக்காவில் புதிதாக பதவியேற்கும் எந்தவொரு அரசும் பாரம்பரியமாக அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ அல்லது நேட்டோ நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பதே வழக்கம். இதற்கு மாறாக, இந்திய அமைச்சருடன் தனது முதல் சந்திப்பை நடத்த மார்கோ ரூபியோ முடிவு செய்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க வெளியுறவு அமைச்சராக ரூபியோ பதவியேற்ற பிறகு அவரது முதல் இருதரப்பு சந்திப்பில் அவருடன் பேசியதில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பில் இரு நாடுகளின் விரிவான இருதரப்பு உறவை மறுஆய்வு செய்தோம். இதில் ஒரு வலுவான ஆதரவாளராக ரூபியோ இருந்து வருகிறார். பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டார். இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த அவருடன் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்" என்று கூறியுள்ளார்.
ரூபியோ - ஜெய்சங்கர் இடையிலான சந்திப்பை தொடர்ந்து குவாட் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும். இதில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் இவாயா தகேஷி ஆகியோருடன் மார்கோ ரூபியோயும் ஜெய்சங்கரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
ட்ரம்ப் நிர்வாகம் பதவியேற்ற அடுத்த சில மணி நேரத்தில் குவாட் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது என எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.ஜெய்சங்கர், இவ்விரு கூட்டத்துக்கு பிறகு வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ஸை சந்தித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வால்ஸ் பதவியேற்ற பிறகு அவரது முதல் சர்வதேச சந்திப்பு இதுவாகும்.
இதுகுறித்து எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், “பிற்பகலில் வால்ஸை சந்தித்தில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பில் உலகளாவிய ஸ்திரத்தன்மை, செழிப்பை மேம்படுத்துவது பற்றியும் பரஸ்பர நலனை உறுதிப்படுத்த இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தோம்" என்று கூறியுள்ளார்.
புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில் பங்கேற்ற எஸ்.ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்தது பெரும் கவுரவமாக இருந்தது என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 56-வது சபாநாயகர் மைக் ஜான்சன், செனட் பெரும்பான்மை தலைவர் ஜான் துனே, எப்.பி.ஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் படேல் உள்ளிட்டோரையும் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT