Published : 22 Jan 2025 07:26 PM
Last Updated : 22 Jan 2025 07:26 PM
வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அந்நாட்டின் இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக திங்கள்கிழமை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உடனடியாக பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில், "பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். இந்த உத்தரவு 30 நாட்களில் நடைமுறைக்கு வரும். அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களின் குழந்தைகள் அமெரிக்காவின் ‘அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்’ அல்ல என்பதால், குடியுரிமை சட்டத்தின் 14-வது திருத்தத்தில் வழங்கப்பட்ட அரசியலமைப்பு உத்தரவாதம் அவர்களுக்கு பொருந்தாது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ஹெச்1-பி (H-1B) விசா மூலம் அமெரிக்கா சென்று அங்கு பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் நிலையில் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு அவர்களுக்கு மிகப் பெரிய கவலையை அளித்துள்ளது. வேலை விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இனி இயல்பாக குடியுரிமை பெற மாட்டார்கள் என்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். அதோடு, தற்காலிக விசாக்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை ஆண்டுதோறும் வேலைக்கு அமர்த்தும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இது தொடர்பான விவாதம் அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்கு இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ரோ கன்னா, "பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையில் நிர்வாக உத்தரவின் மூலம் செய்யப்படும் மாற்றங்கள் சட்டவிரோத மற்றும் ஆவணமற்ற குடியேறிகளுக்கு புதிதாகப் பிறந்த குழந்தைகளை மட்டுமல்ல, ஹெச்1-பி போன்ற விசாக்கள் மூலம் அமெரிக்காவில் சட்டபூர்வமாக தங்கியிருப்பவர்களையும் பாதிக்கும்.
ட்ரம்ப்பின் உத்தரவு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமை குடியுரிமையை நீக்குகிறது. ஆவணமற்ற பெற்றோருக்கு மட்டுமல்ல, தற்காலிகமாக மாணவர் விசா, ஹெச்1-பி/ ஹெச்2-பி விசா அல்லது வணிக விசாவில் இருக்கும் 'சட்டப்பூர்வமான' குடியேறிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை மறுக்கப்படுகிறது. சட்டப்பூர்வ குடியேற்றத்தை விரும்புவதாக குடியரசுக் கட்சியினர் கூறுவது பாசாங்கு என்பது இதில் இருந்து தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை பறிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், இந்த உத்தரவை எதிர்த்து தான் தொடர்ந்து போராடப் போவதாகவும் மற்றொரு இந்திய - அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ தானேதர் தெரிவித்துள்ளார். "டொனால்டு ட்ரம்ப் என்ன சொன்னாலும் சரி, பிறப்புரிமை குடியுரிமை நாட்டின் சட்டமாகும். அது அப்படியே இருக்கும். எந்த விலை கொடுத்தேனும் அதைப் பாதுகாக்க நான் போராடுவேன்” என தெரிவித்துள்ளார்.
இந்திய - அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால் கூறும்போது, "இது அரசியலமைப்புக்கு விரோதமானது. பேனாவைக் கொண்டு இதை மாற்றிவிட முடியாது. இது சட்டமாக ஆக்கப்பட்டால், அது நமது நாட்டின் சட்டங்களையும் அரசியலமைப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னுதாரணங்களையும் கேலி செய்வதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே, இந்த உத்தரவை எதிர்த்து, குடியேற்ற உரிமைக் குழுக்களின் கூட்டணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ட்ரம்ப்பின் நிர்வாக உத்தரவைத் தடுக்கக் கோரி 22 மாநிலங்களைச் சேர்ந்த அட்வகேட் ஜெனரல்கள் இரண்டு கூட்டாட்சி மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 14-வது திருத்தத்தின் கீழ் பிறப்புரிமை குடியுரிமை "இயல்பானது" என்றும், அதைத் திருத்துவதற்கு அதிபருக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ அரசியலமைப்பு அதிகாரம் இல்லை என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.
"பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்ய முயற்சிக்கும் அதிபரின் நிர்வாக உத்தரவு அப்பட்டமாக அரசியலமைப்புக்கு விரோதமானது. மிகவும் வெளிப்படையாக, அமெரிக்கருக்கு விரோதமானது" என்று கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் ராப் போண்டா கூறினார்.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜனநாயக் கட்சியின் துணை தேசிய நிதித் தலைவருமான அஜய் பூடோரியா, "14-வது திருத்தம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல. இந்த நிர்வாக உத்தரவு அரசியலமைப்பிற்கு விரோதமானது மட்டுமல்ல, அமெரிக்காவை வரையறுக்கும் சமத்துவம் மற்றும் நீதியின் மதிப்புகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை அச்சுறுத்தும் கொள்கைகளுக்கு எதிராக தெற்காசிய மற்றும் பரந்த புலம்பெயர்ந்த சமூகங்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இந்த பிளவுபடுத்தும் மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் வெற்றிபெறாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மீண்டும் வலுக்கும் ஹெச்-1பி விசா விவகாரம்: இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை ஆரக்கள் நிறுவனத்தின் சிடிஓ லேரி எல்லிசன், சாஃப்ட்பேங்க் சிஇஓ மசயோஷி சன், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மென் உள்ளிட்டோரைச் சந்தித்தார். பின்னர் அவர்களுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “ஹெச்-1பி விசா மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவுக்கு வருவது தொடர்பாக முன்வைக்கப்படும் வாதத்தின் இரு பக்கங்களையும் விரும்புகிறேன். அதேநேரத்தில், நம் நாட்டுக்கு வரும் மிகவும் திறமையான மனிதர்களை நான் விரும்புகிறேன்.
மேலும், ஹெச்-1பி விசா திட்டம் குறித்து நான் நன்கு அறிவேன். நான் இந்த திட்டத்தைப் பயன்படுத்துகிறேன். மதுபானம் சார்ந்த நிபுணர்கள் மட்டுமல்ல, வெயிட்டர்களில்கூட சிறந்த நபர்களை நாம் பெற வேண்டும். திறமைவாய்ந்த மக்கள் உள்ளே வர வேண்டும். இப்போது அதைச் செய்வதன் மூலம், நாங்கள் வணிகங்களை விரிவுபடுத்துகிறோம். அது அனைவரையும் கவனித்துக் கொள்கிறது. நான் உண்மையில் உணருவது என்னவென்றால், உண்மையிலேயே திறமையான மக்கள், சிறந்த மனிதர்கள் நம் நாட்டுக்குள் வர அனுமதிக்க வேண்டும். ஹெச்-1பி திட்டத்தின் மூலம் நாங்கள் அதைச் செய்கிறோம்” என தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள மிகவும் திறமையான வெளிநாட்டினருக்கான தற்காலிக விசாக்கள்தான் ஹெச்1-பி (H-1B) விசாக்கள். இந்த விசாக்களில் 72%-ஐ இந்தியர்கள் பெற்றுள்ளனர். இந்த விசா ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பதாக ட்ரம்ப் கூறியதிலிருந்து ஹெச்-1பி விசா குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இவ்விஷயத்தில் தனது நிலைப்பாட்டை ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அவரது ஆதரவாளர்களில் சிலர் இந்த விசா, அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT