Published : 22 Jan 2025 11:13 AM
Last Updated : 22 Jan 2025 11:13 AM

‘புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை’ - ட்ரம்ப் அதிரடி

வாஷிங்டன்: இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் ஆகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய நாட்டு அதிபரை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

“நம்மிடம் திறன்மிக்க அதிபர் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த போர் தொடங்கி இருக்க வாய்ப்பு இல்லை. நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனில் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. ரஷ்யா ஒருபோதும் உக்ரைனுக்கு படையெடுத்து சென்றிருக்காது. புதின் உடன் எனக்கு வலுவான புரிதல் உள்ளது. அதனால் அங்கு போர் என்பது ஏற்பட்டிருக்காது.

ஆனால், அவர் பைடனை மதிக்கவில்லை. இதை நாம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளலாம். அவர் மக்களை மதிப்பது கிடையாது. அதை அவர் ஸ்மார்ட்டாக செய்தார். அதே போல மத்திய கிழக்கிலும் இந்தச் சூழல் ஏற்பட்டிருக்காது.

என்னை எப்போது சந்திக்க வேண்டுமென புதின் கருதுகிறாரோ அப்போது அவரை சந்திக்க நான் தயார். லட்ச கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நகரங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இது ஒரு மோசமான சூழ்நிலை. நமக்கு களத்தில் இருந்து கிடைக்கும் செய்திகளை காட்டிலும் உக்ரைனில் கூடுதலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதே நிஜம். அதற்காக பத்திரிகையாளர்கள் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அசல் உயிரிழப்பு விவரம் தெரியக்கூடாது என அரசு எண்ணி இருக்கலாம்.

நமது தரப்பில் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது தொடர்பாக விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசி வருகிறேன். அவர் அமைதியை விரும்புகிறார். இருந்தாலும் இந்த சிக்கலுக்கு தீர்வு காண இரண்டு பக்கமும் பேச வேண்டியுள்ளது. விரைவில் புதின் உடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளோம். அவர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது” என பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது உக்ரைன் - ரஷ்யா போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில் அளித்தார்.

உக்ரைனுக்கு அமெரிக்காவை விட ஐரோப்பிய யூனியன் அவர்களுக்கு அதிகம் நிதி உதவி செய்ய வேண்டும் என ட்ரம்ப் நினைப்பதாக தெரிவித்தார். ட்ரம்ப் அதிபர் ஆகியுள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் என இருவரும் தங்களது இருநாட்டு உறவு குறித்து பேசியதாக தகவல்.

ரஷ்யா - உக்ரைன் போர்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022-ல் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் நூற்றுக்கணக்கானோர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியானது. அவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

ராணுவத்துக்கு உதவியாளர் என சொல்லி அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் மோசடியும் நடந்துள்ளது. ரஷ்யாவில் சிக்கிய சிலரை இந்தியா விடுவித்து, தாயகம் அழைத்து வந்தது. அந்த நாட்டு ராணுவத்தில் இந்தியர்கள் பணியாற்றும் தகவல் கடந்த ஆண்டு தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x