Published : 22 Jan 2025 09:29 AM
Last Updated : 22 Jan 2025 09:29 AM
புதுடெல்லி: “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கட்டணத் திட்டங்கள் சர்வதேச பொருளாதார உறுதித்தன்மையை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும், அந்நிய முதலீடுகள் வருவதை மட்டுப்படுத்தும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர், டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, புதிய கரன்சியை உருவாக்க மாட்டோம் என்றும் டாலருக்கு பதிலாக வேறு கரன்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.
இந்நிலையில், ட்ரம்ப் எச்சரிக்கை குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறுகையில், “ட்ரம்ப்பின் வரி விதிப்புகள் எங்கே முதலீடுகளை செய்வது என்ற மிகப் பெரிய நிச்சயமற்றத் தன்மை உருவாகும். ட்ரம்ப்பின் வரி உயர்வு அச்சுறுத்தல்கள் உலகின் பிற நாடுகளுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக் கூடும்.
அதேவேளையில் அமெரிக்காவுக்கு அத்தகைய வரி உயர்வானது நிர்வாகம் எதிர்பார்க்கும் நன்மைகளைத் தரும் என்று நான் நம்பவில்லை. ஏனெனில், பொருட்களை அமெரிக்காவுக்கு வெளியே உற்பத்தி செய்வது செலவு குறைவு என்ற காரணத்தாலேயே அமெரிக்கா பொருட்களை வெளியே உற்பத்தி செய்து இறக்குமதி செய்து கொள்கிறது. அதனால் அவற்றுக்கு கூடுதல் வரி விதித்து அமெரிக்காவுக்கு கொண்டு வருவது அவர்களுக்கு பலன் அளிக்காது.
வேண்டுமென்றால் இந்த மிரட்டலின் நீட்சியாக உற்பத்தியாகும் களத்தை வேண்டுமானால் அமெரிக்கா மாற்றலாம். எப்படி சீனாவில் உற்பத்தியானவற்றை வியட்நாமுக்கு அமெரிக்கா மாற்றியதோ அப்படி வேண்டுமானால் மாற்றலாம்.
சர்வதேச வரி உயர்வு அமலுக்கு வந்தால் அது மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வதை பாதிப்பதோடு அமெரிக்காவில் உற்பத்தி செய்வதை அதிகரிக்கச் செய்யும். அந்த உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிக்கும். சீனா உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கிறது என்றால் அது அவர்களுக்கு கையடக்க செலவாக இருக்கிறது. ஆனால், அமெரிக்காவுக்கு உள்நாட்டு உற்பத்தி அப்படி இருக்காது.
எனவே, ஒரே இரவில் வரி விதிப்பை ட்ரம்ப் அதிகரித்தால் அது எப்படி உலக நாடுகளை பாதிக்கிறதோ அதேபோல் அமெரிக்காவையும் பாதிக்கும். அதிபர் ட்ரம்புக்கு அமெரிக்கா அனுபவிக்கும் மூன்று நன்மைகள் மனதில் இருக்கும் என நம்புகிறேன். இப்போது உள்ள நடைமுறை பொருளாதார சமநிலைக்கு உதவுகிறது, வருவாய்க்கு ஆதாரமாக இருக்கிறது மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கிறது.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT