Published : 21 Jan 2025 03:26 PM
Last Updated : 21 Jan 2025 03:26 PM
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விவேக் ராமசாமி, இப்பணியை எலான் மஸ்க் குழு சிறப்பாக செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, செயல் திறன் துறை (Department of Government Efficiency - DOGE) உருவாக்கப்பட்டது. இதனை தொழிலதிபரும் குடியரசு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான விவேக் ராமசாமியும், தொழிலதிபர் எலான் மஸ்க்கும் இணைந்து கவனிப்பார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் நேற்று (ஜன.20) பதவியேற்ற நிலையில், DOGE பொறுப்பில் இருந்து விலகுவதாக 39 வயதாகும் விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “DOGE உருவாக்கத்தில் உதவுவதற்கு கிடைத்த வாய்ப்பு எனக்கு கிடைத்த கவுரவம். அரசாங்கத்தை நெறிப்படுத்துவதில் எலான் மற்றும் அவரது குழுவினர் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஓஹியோ மாகாணத்துக்கான எனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து மிக விரைவாக நான் தெரிவிக்க வேண்டியிருக்கும். முக்கியமாக, அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளதால், விவேக் ராமசாமி அரசு செயல் திறன் துறையை விட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், விவேக் ராமசாமி வெளியேற எலான் மஸ்க்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, DOGE உருவாக்கத்தில் விவேக் ராமசாமியின் பங்கை வெள்ளை மாளிகை பாராட்டியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் குழுவின் செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி, “DOGE-ஐ உருவாக்குவதில் விவேக் ராமசாமி முக்கிய பங்கு வகித்தார். அவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார். அதற்கு அவர் DOGE-க்கு வெளியே இருக்க வேண்டும் என்பதால், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நாங்கள் அவருக்கு மிகுந்த நன்றி கூறுகிறோம். மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்!” என்று தெரிவித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் தனது போட்டி குறித்த அறிவிப்பை முறையாக வெளியிடுவதற்கான சரியான தேதி குறித்து ராமசாமி யோசித்து வருகிறார். அவர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஓஹியோவின் முதல் இந்திய அமெரிக்க ஆளுநராக அவர் இருப்பார். அமெரிக்காவின் மாகாண ஆளுநராக லூசியானாவில் பாபி ஜிண்டால், தெற்கு கரோலினாவில் நிக்கி ஹேலி ஆகிய இந்திய அமெரிக்கர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஓஹியோ ஆளுநருக்கான விவேக் ராமசாமியின் அறிவிப்பு அடுத்த வார தொடக்கத்தில் வரலாம். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, அதில் தோல்வியடைந்தார். பின்னர் அவர் ட்ரம்பை ஆதரித்து, அவரது நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT