Published : 21 Jan 2025 02:49 PM
Last Updated : 21 Jan 2025 02:49 PM
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதைக் கொண்டாடும் நிகழ்வில், நாஜி பாணி சல்யூட் போல ஒரு கை செய்கை செய்ததாக தொழிலதிபர் எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களுக்கு பின்பு, ட்ரம்பின் ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றிய எலான் மஸ்க், "நவம்பர் 4-ம் தேதி வெளியான தேர்தல் முடிவு சாதாரண வெற்றி இல்லை. இது மனித நாகரிகப் பாதையில் உள்ள முள்கரண்டி. இது மிகவும் முக்கியமானது, இந்த வெற்றியை சாத்தியமாக்கியதற்கு நன்றி... நன்றி...!" என்று தெரிவித்தார். பின்பு மஸ்க் தனது வலது உள்ளங்கையை இடது மார்பில் வேகமாக அடித்து, பின்பு அனைத்து விரல்களையும் ஒன்றிணைத்து உள்ளங்கை கீழ்நோக்கியபடி கையை மேல் நோக்கி நீட்டினார். பின்பு தன்னை எதிர்பார்த்து காத்திருந்தவர்களை நோக்கியும் அதே செய்கையைச் செய்தார்.
அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்பின் புதிய நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசு செயல்திறன் துறையை வழிநடத்த இருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்-ன் சிஇஓ-வான எலான் மஸ்கின் இந்த செய்கைக்கு இணையத்தில் உடனடி எதிர்வினை உருவாக்கியுள்ளது. சில சமூக ஊடக பயனர்கள், மஸ்கின் செய்கை, அடால்ஃப் ஹிட்லரின் ‘சீக் ஹெயில்’ வணக்கத்தை ஒத்திருப்பதாக குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து நியூயார்கைச் சேர்ந்த ஜனநாயக கட்சியின் ஜெர்ரி நாட்லர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அதிபரின் பெயரில் நடந்த விழாவில், ஹெய்ல் ஹிட்லர் வணக்கத்தை ஒத்த ஒன்றினை நாம் பார்க்கும் நாள் வரும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை" என்று தெரிவித்துள்ளார். மேலும், “இந்த அருவருப்பான செயலுக்கு நமது சமூகத்தில் இடம் இல்லை. மனித வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் இதுவும் ஒன்று. யூத எதிர்ப்பு என்று கூறப்படும் இந்த வெறுக்கத்தக்க செயலை கண்டிப்பதில் என் சகாக்கள் ஒன்று கூட வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மஸ்கின் இந்த செய்கையை இஸ்ரேல் ஊடகமும் கண்டித்துள்ளது. அங்குள்ள பத்திரிகையான ஹராட்ஸ், “மஸ்க் தனது உரையை ரோமானிய சல்யூட், பொதுவாக நாஜி ஜெர்மனியுடன் தொடர்புடைய பாசிச சல்யூட்டுடன் நிறைவு செய்தார்" என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, யூதர்களுக்கு ஆதரவான ஏடிஎல் அமைப்பு, அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோடீஸ்வர் மஸ்க் செய்தது உற்சாகமானதொரு தருணத்தில் அருவருகத்தக்க ஒரு செயலே. அது நாஜி சல்யூட் இல்லை. இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் கொஞ்சம் கருணைகாட்ட வேண்டும். இது ஒரு புதிய தொடக்கம். வரும் மாதங்கள் மற்றும் வருடங்களில் நாம் நன்மை பெறுவோம் என்ற நம்பிக்கையில் ஒற்றுமையை நோக்கி உழைப்போம்” என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஒரு கொலை வெறித் தாக்குதலில் இருந்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்த ட்ரம்ப் தப்பித்ததில் இருந்து ட்ரம்புக்கு வெளிப்படையான தனது ஆதரவை மஸ்க் தெரிவிக்கத் தொடங்கினார். அதிலிருந்து அவரது அரசியல் பார்வை வலதுசாரி பக்கம் தீவிரமடையத் தொடங்கியது கவனிக்கத்தக்கது.
Wait, did Musk just do a Nazi salute? pic.twitter.com/VZChlQXSYv
— Republicans against Trump (@RpsAgainstTrump) January 20, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT