Published : 20 Jan 2025 01:16 PM
Last Updated : 20 Jan 2025 01:16 PM

இந்தியாவின் 33.80 டிரில்லியன் டாலர் பணத்தை பிரித்துக்கொண்ட இங்கிலாந்தின் 10% பணக்காரர்கள்: ஆக்ஸ்பாம் அறிக்கை

டாவோஸ் (ஸ்விட்சர்லாந்து): காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 64.82 டிரில்லியன் அமெரிக்க டாலர்களில் 33.80 டிரில்லியன் டாலர்கள் அந்நாட்டின் 10% பணக்காரர்கள் பிரித்துக்கொண்டதாக ஆக்ஸ்பாம் எனும் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தின் முதல் நாளில், உலகளாவிய சமத்துவமின்மைக்கான பின்னணி குறித்த அறிக்கையை ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வெளியிட்டது. அதில், இங்கிலாந்தின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது, இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட செல்வங்கள் குறித்தும், அவை எவ்வாறு அந்நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கு பங்கு பிரிக்கப்பட்டது என்பது குறித்தும் ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கைக்கு 'Takers, not Makers' என தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 1765 மற்றும் 1900 க்கு இடையிலான காலனித்துவத்தின் ஒரு நூற்றாண்டு காலத்தில் இங்கிலாந்து இந்தியாவிலிருந்து 64.82 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டு சென்றது. இதில் 33.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நாட்டின் பணக்காரர்களில் 10 சதவீதத்தினருக்குச் சென்றதாக எங்களின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில், இன்று பணக்காரர்களாக இருப்பவர்களில் கணிசமானவர்கள், தங்கள் குடும்ப செல்வத்தை அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்திலிருந்து பெற்றவர்கள். குறிப்பாக அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டபோது பணக்காரர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த இழப்பீடு எவ்வளவு என்பதில் இருந்து இதனை கண்டுபிடிக்க முடியும்.

1765 மற்றும் 1900-க்கு இடையிலான 100 ஆண்டுகளுக்கும் மேலான காலனித்துவத்தின் போது இங்கிலாந்து இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்ற பணத்தில் 52 சதவீதத்தை அந்நாட்டின் 10 சதவீத பணக்காரர்கள் பெற்றுள்ளனர். அப்போதிருந்த புதிய நடுத்தர வர்க்கத்தினர் 32 சதவீத பணத்தைப் பெற்றுள்ளனர்.

நவீன பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக கிழக்கிந்திய கம்பெனி ஒரு முன்னோடியாக இருந்தது. நவீன காலத்தில், பன்னாட்டு நிறுவனங்கள், பெரும்பாலும் ஏகபோக அல்லது கிட்டத்தட்ட ஏகபோகமாகச் செயல்படுகின்றன. உலகளாவிய தெற்கில் உள்ள தொழிலாளர்களை, குறிப்பாக பெண் தொழிலாளர்களை, முதன்மையாக உலகளாவிய வடக்கை அடிப்படையாகக் கொண்ட பணக்கார பங்குதாரர்கள் தொடர்ந்து சுரண்டி வருகின்றனர்.

வரலாற்று காலனித்துவ காலத்தில் முக்கியமானதாக இருந்த சமத்துவமின்மை மற்றும் கொள்ளை, நவீன வாழ்க்கையை தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. இது ஒரு ஆழமான சமத்துவமற்ற உலகத்தை உருவாக்கியுள்ளது. இனவெறியை அடிப்படையாகக் கொண்ட பிரிவினையால் பிளவுபட்ட ஒரு உலகம், உலகளாவிய வடக்கில் உள்ள பணக்காரர்களுக்கு முதன்மையாக பயனளிப்பதாக சூழல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உலகலாவிய வடக்கு, உலகளாவிய தெற்கிலிருந்து செல்வத்தை தொடர்ந்து சுரண்டி வருகிறது.

1750 ஆம் ஆண்டில், இந்திய துணைக்கண்டம் உலகளாவிய தொழில்துறை உற்பத்தியில் தோராயமாக 25 சதவீதத்தைக் கொண்டிருந்தது. ஆனால், 1900 வாக்கில் இந்த எண்ணிக்கை வெறும் 2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இவ்வாறு ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x