Published : 20 Jan 2025 03:31 AM
Last Updated : 20 Jan 2025 03:31 AM
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்if ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்கிறார்.
நடனம் ஆடினார் ட்ரம்ப்: ட்ரம்ப் பதவியேற்பு விழா கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டன. விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ட்ரம்ப் நேசஷனல் கோல்ப் கிளப்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட ட்ரம்ப் விருந்தினர்கள் 500 பேர் பங்கேற்றனர். இங்கு நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் கோல்ப் கிளப் பால்கனியில் இருந்து கண்டு ரசித்தனர். அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளை ட்ரம்ப் ரசித்தார். விருந்தினர்களுடன் சேர்ந்து தனது வழக்கமான ஸ்டைலில் ட்ரம்ப் நடனம் ஆடினார்.
வெற்றி பேரணி: கோலப் கிளப் கொண்டாட்ட நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நேற்று காலை வாஷிங்டன் திரும்பினார் ட்ரம்ப் . இங்குள்ள கேபிடல் ஒன் அரங்கில் அவரது ஆதரவாளர்கள், ‘மேக் அமெரிக்கா கிரேட் எகேன்’ என்ற பெயரில் வெற்றி கொண்டாட்ட நிகழ்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ட்ரம்ப் பங்கேற்றார். அதன்பின் நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்றார்.
உள்அரங்கில் விழா: அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா கேபிடல் கட்டிட வளாகத்தின் திறந்தவெளியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் அங்கு இன்று கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், அமெரிக்க அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும் என ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஏற்கெனவே 2,20,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், பதவியேற்பு விழா நிகழ்ச்சி உள்அரங்குக்கு மாற்றப்பட்டதால் அதில் 600 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.
அதனால் பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை ட்ரமப் ஆதரவாளர்கள் பார்ப்பதற்கு கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு 20,000 பேர் பங்கேற்க முடியும். புதிய அதிபராக பதவியேற்கும் ட்ரம்ப்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமானம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்கிறார். பதவியேற்றபின் புதிய அதிபர் ட்ரம்ப் உரையாற்றுகிறார். அடுத்த 4 ஆண்டுகளில் அவர் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசை நிகழ்ச்சி: பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் ‘அழகான அமெரிக்கா’ ‘இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட அமெரிக்கா’ போன்ற தேச பக்தி பாடல்களை அமெரிக்காவின் பிரபல பாடகி கேரி அண்டர்வுட், பிரபல பாடகர் லீ கிரீன் வுட் ஆகியோர் பாடுகின்றனர்.
விருந்தினர்கள்: அமெரிக்க அதிபரின் பதவியேற்ப விழாவுக்கு வெளிநாட்டு தலைவர்களை அழைப்பது வழக்கம் இல்லை. ஆனால், இந்த முறை ட்ரம்ப் வெளிநாட்டு தலைவர்கள் சிலருக்கு, அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஹங்கேரி, அர்ஜென்டினா, சீனா அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் வருகை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
அதிபர் பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடன், துணை அதிபர் பதவியில் இருந்த வெளியேறும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
அமெரிக்காவின் கோடீஸ்வர தொழிலதிபர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசாஸ், மார்க் ஜூகர்பெர்க் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் முகேஸ் அம்பானி ஆகியோர் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
மதிய விருந்து: பதவியேற்பு விழாவை தொடர்ந்து அதிபர், துணை அதிபர் விருந்தினர்களுக்கு கேபிடல் கட்டிட அரங்கில் நாடாளுமன்ற கூட்டுக் குழு சார்பில் மதிய விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தில் இடம்பெறும் உணவு வகை பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. அமெரிக்காவின் பிரபல உணவு வகைகள் இதில் இடம்பெறும். ட்ரம்புக்கு பிடித்தமான இறைச்சி, கடல் உணவு மற்றும் இனிப்புகள் இதில் இடம்பெறும் என தெரிகிறது.
புதிய அதிபராக பதவியேற்றபின் வெள்ளை மாளிகை திரும்பும் ட்ரம்ப் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகிறார். தேர்தல் வாக்குறுதிகளை முதல் நாளிலேயே நிறைவேற்றுவேன் என ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி சில உத்தரவுகளை ட்ரம்ப் பிறப்பிப்பார் என தெரிகிறது. அதிபர் பைடன் ரத்து செய்த சில திட்டங்களை, ட்ரம்ப் மீண்டும் இன்று அமல்படுத்தி உத்தரவு பிறப்பிக்கலாம் என கூறப்படுகிறது.
அதிபர் பதவியேற்பு விழாவுக்குப்பின், ‘தலைமை கமாண்டர் விருந்து, லிபர்ட்டி விருந்து மற்றும் ஸ்டார்லைட் விருந்து ’ என்ற பெயர்களில் 3 முக்கிய கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவற்றிலும் புதிய அதிபர் ட்ரம்ப் பங்கேற்கிறார். இவற்றில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.
சிறப்பு பிரார்த்தனை: வாஷிங்டனில் உள்ள நேஷனல் தேவாலயத்தில் நாளை சிறப்ப பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதிலும் புதிய அதிபர் ட்ரம்ப் பங்கேற்கிறார். இத்துடன் அதிகாரப்பூர்வமாக நடைபெறும் அதிபர் பதவியற்பு விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நிறைவுபெறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT