Published : 19 Jan 2025 01:32 AM
Last Updated : 19 Jan 2025 01:32 AM
சான் பிரான்சிஸ்கோ: சுசிர் பாலாஜி மரண வழக்கில் காவல் துறைக்கு உதவ தயார் என 2 மாதத்துக்கு பிறகு ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர் இந்தியரான சுசிர் பாலாஜி (26). 4 ஆண்டுக்குப் பின் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறிய அவர், சாட் ஜிபிடியை உருவாக்கியதில் ஓபன் ஏஐ நிறுவனம் காப்புரிமையை மீறிவிட்டதாக குற்றம்சாட்டி வந்தார்.
இந்த சூழலில் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்த தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பாலாஜின் தாய் பூர்ணிமா ராவ் இதை ஏற்கவில்லை. தனது மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஓபன் ஏஐ நிறுவனம் மவுனமாக இருந்து வந்தது.
பாலாஜி உயிரிழந்து 2 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், ஓபன் ஏஐ நிறுவனம் முதல் முறையாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சுசிர் பாலாஜி எங்கள் குழுவில் மதிப்புமிக்க நபராக திகழ்ந்தார். அவருடைய மரணம் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. அவரது மறைவுக்கு மிகவும் வருந்துகிறோம். பாலாஜி மரண வழக்கில் தேவைப்பட்டால் உதவ தயாராக இருக்கிறோம் என சான் பிரான்சிஸ்கோ போலீஸாரிடம் தெரிவித்துள்ளோம்.
இந்த விவகாரத்தை சட்ட அமலாக்கத் துறை சரியாக கையாளும் என்றும் இது தொடர்பான தகவலை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளும் என்றும் நம்புகிறோம். மரியாதை நிமித்தமாக இதுகுறித்து வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT