Published : 17 Jan 2025 11:26 PM
Last Updated : 17 Jan 2025 11:26 PM
பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குடன் ஒரு பயனுள்ள உரையாடலை நடத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (ஜன.17) தெரிவித்தார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “சீன அதிபர் உடனான தொலைபேசி அழைப்பு சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிகவும் நன்மையானதாக இருந்தது. நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை ஒன்றாகத் தீர்ப்போம் என்பதும், அதனை உடனடியாகத் தொடங்குவோம் என்பதும் எனது எதிர்பார்ப்பு. வர்த்தகம், வலி மருந்துகள், டிக்டாக் உள்ளிட்ட பல விஷயங்களை சமநிலைப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம்.
உலகை மிகவும் அமைதியானதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற நானும் அதிபர் ஜி ஜின்பிங்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசியதை சீன அரசு ஊடகமான சின்ஹுவா உறுதிப்படுத்தியது, ஆனால் அவர்களின் கலந்துரையாடல் குறித்த விவரங்களை அது வெளியிடவில்லை.
ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டனில் நடைபெற உள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள மாட்டார் என்று சீனா அறிவித்துள்ளது, ஆனால் அவருக்கு பதில் துணை அதிபர் ஹான் ஜெங் சிறப்பு பிரதிநிதியாக பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT