Published : 17 Jan 2025 09:15 AM
Last Updated : 17 Jan 2025 09:15 AM
காசாவிலிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்பந்தம் எட்டப்பட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசியல் பாதுகாப்பு அமைச்சரவையை கூட்டியுள்ளதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்பந்தம் கத்தார் தலைநகர் தோஹாவில் எட்டப்பட்டுள்ளது. முன்னதாக, போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தப் பணியில் அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது மூலம் 15 மாதங்களாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் காசாவிலிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காசாவில் இருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டது. பிணைக் கைதிகள் (உயிருடன் இருப்போர், இறந்தோர்) திரும்புதலை உறுதி செய்தல் உள்ளிட்ட போர் இலக்குகள் அனைத்திலும் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.” என்று தெரிவித்துள்ளது.
15 மாத கால போர்; 46,000+ பலி.. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதில், காசாவில் 46,700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. 23 லட்சம் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவில் பரவலான அழிவு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நேற்றைய தாக்குதலில் 72 பேர் பலி.. இதற்கிடையில் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்க வியாழனன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் காசாவில் 72 பேர் கொல்லப்பட்டனர். கடைசி நேரத்தில் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சுணக்கம் காட்டியதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது.
அனைவருக்குமான ஒரு ‘டீல்’.. இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் முதல் ஆறு வாரம் இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய சூழலில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது காசா மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. காசா மக்கள் மட்டுமல்ல இஸ்ரேல், அமெரிக்கா எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஆதரவைப் பெற்றுள்ளது.
இருப்பினும், இஸ்ரேலில் சிலர் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர். ஹமாஸை முழுமையாக அழித்தொழிக்கும் வரை நெதன்யாகு போர் நிறுத்தத்தை செயல்படுத்தக் கூடாது என்று அந்த அமைப்பினர் முழங்கி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT