Published : 07 Jan 2025 07:37 PM
Last Updated : 07 Jan 2025 07:37 PM

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக கனடா பிரதமராக யாருக்கு வாய்ப்பு? - ஒரு பார்வை

ஒட்டாவோ: கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதில் யார் புதிய பிரதமராக வருவார்கள் என்ற கேள்வி விவாதிக்கப்பட்டு வருகிறது.

கனடாவில் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு, வீட்டு வசதிக்கான விலை உயர்வு, அதிகரித்து வரும் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான கனடாவின் உறவுச் சிக்கலானதும் ட்ரூடோவுக்கு எதிராக திரும்பியது. ட்ரூடோவின் செல்வாக்கு சரிந்து வருவதை அடுத்து, மார்ச் மாதம் கூட உள்ள நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

தற்போது ஆளும் லிபரல் கட்சிக்கு போதிய பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மைக்கு 170 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், லிபரல் கட்சி 153 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ட்ரூடோ ஆட்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த அறிவிப்பு அவருக்கும் லிபரல் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ட்ரூடோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இந்தப் பின்னணியில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும், புதிய பிரதமர் பொறுப்பேற்கும் வரை பதவியில் தொடரப் போவதாகவும் ட்ரூடோ நேற்று (ஜன.6) அறிவித்தார். அதேநேரத்தில், புதிய பிரதமராக யார் பொறுப்பேற்றாலும், அவரின் பதவிக் காலம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்கால சவாலை லிபரல் கட்சி எதிர்கொண்டு வருகிறது.

அடுத்த பிரதமர் யார்? - பேங்க் ஆஃப் கனடாவின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி, கனடாவின் அடுத்த பிரதமராக ஆகக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியில் இருந்து பல நாடுகளை விட கனடா வேகமாக மீண்டதற்கு மார்க் கார்னி முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. மிகச் சிறந்த பொருளாதார நிபுணரான கார்னி, அரசியலில் பிரவேசித்து பிரதமராவதில் நீண்ட காலமாக ஆர்வம் கொண்டிருந்தார் என கூறப்படுகிறது. எனினும், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பது முக்கிய குறையாக பார்க்கப்படுகிறது.

அதேபோல், ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து கடந்த மாதம் பதவி விலகிய கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட், புதிய பிரதமருக்கான போட்டியில் முன்னிணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்த பிறகு ட்ரூடோ அவரை கடுமையாக விமர்சித்ததை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அனிதா ஆனந்துக்கு வாய்ப்பு? - குறிப்பாக, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய சூழலில் கனடா போக்குவரத்துத் துறை அமைச்சரும், லிபரல் கட்சியின் மூத்த தலைவருமான அனிதா ஆனந்த் முன்னணியில் உள்ளார். இவரது தந்தை ஆனந்த், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர். தாய் சரோஜ் ராம் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவர்.

மற்றொரு சாத்தியமான வேட்பாளராக புதிய நிதி அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் கருதப்படுகிறது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், ட்ரூடோவின் நெருங்கிய நண்பருமான டொமினிக் லெப்லாங்க், சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் உடனான இரவு விருந்தில் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இணைந்து பங்கேற்றார். ட்ரூடோ குழந்தையாக இருந்தபோது லெப்லாங்க் ட்ரூடோவின் குழந்தை பராமரிப்பாளராக இருந்துள்ளார். எனினும், ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன், கனடாவின் புதிய பிரதமர் பதவியேற்பு நிகழாது என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x