Published : 29 Dec 2024 03:37 AM
Last Updated : 29 Dec 2024 03:37 AM
ஏமனிலிருந்து ஹவுதி தீவிரவாதிகள் ஏவிய ஏவுகணைகளை, அமெரிக்கா வழங்கிய ‘தாட்’ வான் தடுப்பு ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நடுவானில் இடைமறித்து அழித்தது. இந்த வகை ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்துவது இதுவே முதல் முறை.
இஸ்ரேல் மீது ஈரான் கடந்த அக்டோபர் 1-ம் தேதி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ வான் தடுப்பு ஏவுகணைகளால் நடுவானில் இடைமறித்து அழிக்க முடியவில்லை. இதனால் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா, ‘தாட்’ என்ற அதிநவீன வான் தடுப்பு ஏவுகணைகளை வழங்கியது. இதை இயக்குவதற்கு அமெரிக்க வீரர்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டனர்.
தாட் ஏவுகணை லாஞ்சர் வாகனத்தில் உள்ள ரேடார் வானில் 870 முதல் 3,000 கி.மீ தூரம் வரை வரும் சிறிய, நடுத்தர ரக மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கண்டறிந்து அவற்றை இடைமறித்து அழிக்கும் திறன் வாய்ந்தவை. இந்த தாட் ஏவுகணைகள் இஸ்ரேலில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஏமன் நாட்டிலிருந்து ஹவுதி தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இவற்றை நடுவானில் இடைமறித்து அழிக்க தாட் ஏவுகணைகளை இஸ்ரேல் முதல் முறையாக பயன்படுத்தியது. தாட் ஏவுகணைகள் ஹவுதி தீவிரவாதிகளின் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன. இந்த ஏவுகணைகளை ஏவிய அமெரிக்க வீரர் கூறுகையில், ‘‘ இதுபோன்ற தாக்குதலுக்கத்தான் நான் 18 ஆண்டுகளாக காத்திருந்தேன்’’ என உற்சாகமாக கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT