Published : 10 Dec 2024 02:13 AM
Last Updated : 10 Dec 2024 02:13 AM

இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வங்கதேச அரசிடம் இந்தியா வலியுறுத்தல்

வங்கதேசத்தில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அரசிடம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தி உள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதன்காரணமாக கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது.

இந்த சூழலில் வங்கதேசம் முழுவதும் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதோடு பாகிஸ்தானோடு வங்கதேச அரசு அதிக நட்பு பாராட்டி வருகிறது. இதன்காரணமாக வங்கதேச எல்லை பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் எழுந்திருக்கிறது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று அரசு முறை பயணமாக வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு சென்றார். அங்கு வங்கதேச வெளியுறவு செயலாளர் முகமது ஜசீம் உதினை சந்தித்துப் பேசினார். இதன்பிறகு வங்கதேச வெளியுறவு ஆலோசகர் முகமது தவுகித் ஹூசைனுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸையும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்புகள் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, டாக்காவில் நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மையினரின் (இந்துக்கள்) பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இந்து கோயில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்தேன். இதுதொடர்பாக வங்கதேச தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினேன்.

வங்கதேசம், இந்தியா இடையிலான உறவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எரிசக்தி, நதிநீர் பகிர்வு, மின்சாரம், வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இரு நாடுகளின் மக்கள் பலன் அடையும் இந்த திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இவ்வாறு விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது எவ்வித சோதனையும் நடத்த வேண்டாம் என்று வங்கதேச அரசு அறிவித்துள்ளது. இதை பயன்படுத்தி பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் ஆயுதங்கள், போதை பொருளை வங்கதேசத்தில் இறக்குமதி செய்து, அங்கிருந்து இந்தியாவுக்குள் கடத்த முயற்சி செய்யக் கூடும்.

இந்தியாவும் வங்கதேசமும் சுமார் 4,096 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தால் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க தீவிரவாதம் மூலம் பாகிஸ்தான் மறைமுக போரை நடத்தி வருகிறது. இதற்கு தற்போதைய வங்கதேச அரசு ஆதரவு அளிப்பதாக தெரிகிறது.

இதை கண்டிக்கவும், வங்கதேசத்துக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கவும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் பயணமாக வங்கதேசத்துக்கு திங்கள்கிழமை சென்றார். இந்த பயணம் ஆக்கப்பூர்வமாக இருந்தது. இனிமேல் வங்கதேச அரசின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம். இவ்வாறு இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x