Published : 31 Oct 2024 05:25 PM
Last Updated : 31 Oct 2024 05:25 PM
விஸ்கான்சின்: அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப், குப்பை லாரியில் பயணித்து கவனம் ஈர்த்துள்ளார். அவரது ஆதரவாளர்களை குப்பைகள் என அதிபர் ஜோ பைடன் விமர்சித்த நிலையில் இந்த அதிரடி எதிர்ப்பை ட்ரம்ப் வெளிக்காட்டியுள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப், தனது பெயரை தாங்கிய போயிங் 757 ரக விமானத்தில் இருந்து தரையிறங்கினார். உடனடியாக வெள்ளை நிறத்தில் அவரது பெயருடன் தயாராக இருந்த குப்பை வண்டியில் பயணித்தார்.
இதன் மூலம் ஜோ பைடன் தெரிவித்த கருத்தை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தில் தனக்கு சாதகமாக ட்ரம்ப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். “எப்படி உள்ளது எனது குப்பை லாரி? கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனுக்கு நான் கொடுக்கும் மரியாதை இது” என ட்ரம்ப் தெரிவித்தார்.
இதன்போது பத்திரிகையாளர்களை சந்தித்து ட்ரம்ப் பேசினார். அப்போது நகைச்சுவை நடிகர் டோனி ஹிஞ்ச்க்ளிஃப் யாரென்று தெரியாது என அவர் சொன்னார்.
முன்னதாக, அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விருப்பம் உடையவர்கள் என லத்தீன் அமெரிக்கர்களை கீழ்த்தரமாகவும், நக்கலாகவும் டோனி ஹிஞ்ச்க்ளிஃப் விமர்சித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட ஓர் இடத்தை குப்பைகளை கொட்டும் தீவு என்றும் அவர் தெரிவித்தார். அவர் போர்ட்டோ ரிக்கோவை சொன்னதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என ட்ரம்ப் சொல்லியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT