Published : 30 Oct 2024 04:07 PM
Last Updated : 30 Oct 2024 04:07 PM
சிட்னி: அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அங்குள்ள இந்து மத கலாச்சாரம் மற்றும் மரபுகளை கொண்டாடும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கிய இந்து பண்டிகைகள் பெரும்பாலும் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் இந்த அறிவிப்பு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சார்ல்டன் அறிவித்தார்.
பன்முக கலாச்சாரத்துக்கு ஆஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டும் விதமாகவும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. மேலும், ஆஸ்திரேலிய நாட்டின் சமூக கட்டமைப்பு ரீதியாக இந்துக்களின் பங்களிப்பையும் இது அங்கீகரிக்கிறது. இதன் மூலம் பழமை வாய்ந்த இந்து மத சம்பிரதாயங்கள், பாரம்பரியத்துக்கு ஆஸ்திரேலியா மதிப்பளிக்கிறது. இது உலக அரங்கில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்களும் இந்து மக்களின் கலாச்சார பழக்கவழக்கங்கள் மற்றும் கொண்டாட்டங்களை அக்டோபர் மாதத்தில் அனுபவ ரீதியாகவும் பெற முடியும். ஆஸ்திரேலிய நாட்டின் பல்வேறு நகரங்களில் அக்டோபர் மாதத்தில் நடனம், இசை மற்றும் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது ஒருவகையில் கலாச்சார பரிமாற்றமாகவும், பிணைப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில் அமைந்துள்ள இந்து கோயில்கள் மற்றும் அமைப்புகள் இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைக்க உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT