Published : 27 Oct 2024 04:26 AM
Last Updated : 27 Oct 2024 04:26 AM

இஸ்ரேல் போர் விமானங்கள் கூட்டமாக சென்று குண்டு மழை: ஈரானில் ராணுவ தளங்கள் தரைமட்டம்

டெல் அவிவ்: ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் 100 போர் விமானங்கள் நேற்று அதிகாலை ஆக்ரோஷ தாக்குதல் நடத்தின. ஈரானின் ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுத கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் கூட்டமாக சென்று குண்டுமழை பொழிந்தன. இதில் ஈரான் ராணுவ தளங்கள் தரைமட்டமாகின.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வான், தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து லெபனான் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய தீவிரவாத அமைப்புகள் ஈரானின் பினாமிபோல செயல்படுகின்றன. இதேபோல சிரியா அதிபர் ஆசாத், ஏமனின் ஹவுதி தீவிரவாதிகளும் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து,இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு தரப்பும்மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்தது. கடந்த 1-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த சூழலில், ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் 100 போர் விமானங்கள் நேற்று அதிகாலை 2 மணி முதல் தாக்குதல் நடத்தின. முதலில், ஈரான் எல்லை பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த ரேடார் சாதனங்களை இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன.

ஈரானின் நட்பு நாடான சிரியாவின் ரேடார் அமைப்புகளும் குண்டுவீசி அழிக்கப்பட்டன. 2-வது கட்டமாக, இஸ்ரேல் போர் விமானங்கள் கூட்டமாக சென்று ஈரானின் ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுதகிடங்குகள் மீது குண்டுமழை பொழிந்தன. 3-வது கட்டமாக, ஈரானின் 20 ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஆக்ரோஷ தாக்குதல் நடத்தின. இதில் ஈரான் ராணுவ தளங்கள்தரைமட்டமாகின. சுமார் 3 மணி நேரம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

2,000 கி.மீ. பயணித்த விமானங்கள்: இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹாகரி கூறும்போது, ‘‘இஸ்ரேல் மீது ஈரான் கடந்த 1-ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் ஈரானின் ராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகளை முற்றிலுமாக அழித்துள்ளோம். இஸ்ரேல் போர் விமானங்கள் சுமார் 2,000 கி.மீ. தூரம் பறந்து சென்று தாக்குதல் நடத்தின. அனைத்து விமானங்களும் பத்திரமாக இஸ்ரேல் திரும்பிவிட்டன’’ என்றார்.

இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியபோது, ‘‘ஈரான் மற்றும் அதன்ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக 7 முனைகளில் போரிட்டு வருகிறோம். ஈரான் ராணுவத்தால் எங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளத்தில் ரஷ்யாவின் எஸ்-300ஏவுகணை தடுப்பு சாதனம் நிறுவப்பட்டு இருந்தது. அதை தாக்கி அழித்துள்ளோம். எங்களது ஒரு போர் விமானத்தைகூட ஈரான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்த முடியவில்லை. ஈரான் மீண்டும்தாக்கினால், மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுப்போம். அமெரிக்கா கூறியதால், தற்போது ஈரானின் அணு ஆயுத தளங்கள், எண்ணெய் கிணறுகள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை’’ என்று தெரிவித்துள்ளன.

ஈரான் வெளியுறவு துறை வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காப்பு நடவடிக்கை எடுக்க ஈரானுக்கு உரிமை உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

அமைதி காக்க இந்தியா அறிவுரை: இஸ்ரேல் - ஈரான் மோதலால் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அனைத்து தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும். அமைதியை பேண வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. இதனால், மேற்கு ஆசியாவில் மட்டுமின்றி, அதையும் தாண்டி பாதிப்புகள் ஏற்படும். நாடுகள் இடையே பதற்றம் அதிகரிப்பதால் யாருக்கும் எந்த பலனும் கிடையாது. அப்பாவி மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். எனவே, அனைத்து தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும். அமைதியை பேண வேண்டும். பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மேற்கு ஆசியாவில் வாழும் இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், எகிப்து, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘ஈரான் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. போர் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட கூடாது என அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x