Published : 17 Oct 2024 05:19 PM
Last Updated : 17 Oct 2024 05:19 PM
வாஷிங்டன்: “அமெரிக்காவின் குடியேற்ற நடைமுறைகளில் சிக்கல்கள் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும்” என்று அந்நாட்டு துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சி ஆதரவு செய்தி ஊடகமான ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியின்போது அதன் பிரபலமான தொகுப்பாளர் பிரெட் பேயருக்கு அளித்த பேட்டியின்போது இதனைத் தெரிவித்தார். இந்தப் பேட்டியின்போது பேயர், சட்ட விரோத குடியேற்றம், பாலினமாற்று அறுவை சிகிச்சைக்கான வரி செலுத்துவோரின் ஆதரவு மற்றும் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளரான ட்ரம்ப் முன்வைக்கும் வழக்கமான குற்றச்சாட்டுகளை ஒட்டியே திரும்பத் திரும்ப மடக்கி கேள்விகள் கேட்டார்.
அதிபர் ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் நிர்வாகத்தில் உரிய ஆவணங்களின்றி, சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியுள்ளனர் என்ற கேள்விக்கு பதில் அளித்த கமலா ஹாரிஸ், "நாம் விஷயத்துக்கு வருவோம்... சரியா? இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால், அமெரிக்காவின் குடியேற்ற நடைமுறை பழுதடைந்துள்ளன. அதனை சரிசெய்யவேண்டும்” என்றார்.
அவர் முடிக்கும் முன்பே இடை புகுந்த பிரெட், "அதனால்தான் உங்களின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் 85 சதவீதம் அச்சுறுத்தல் இருப்பதாக கூறினாரா?" என்று இடைமறித்தார். "நான் இன்னும் முடிக்கவில்லை... நம்மிடம் ஒரு குடியேற்ற செயல்முறை நடைமுறையில் உள்ளது" என்று கமலா ஹாரிஸ் தொடர முயன்றார். "தோராயமாக மதிப்பீட்டின்படி 6 மில்லியன் மக்கள் நாட்டுக்குள் வந்துளனர்" என மீண்டும் இடைமறித்தார். “நான் முடித்துக்கொள்கிறேன். என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நான் பதில் சொல்லத் தொடங்கினேன்" என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
இதனிடையே, மீண்டும் இடைமறித்த பிரெட், “நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்களின் நிர்வாகம், ட்ரம்ப் வகுத்த பல எல்லைக்கோடு தொடர்பான கொள்கைகளை மாற்றியமைத்தீர்கள். அதிலும் குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்காவிலோ, மெக்சிகோவிலோ சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவதன் மூலம் தடுத்துவைக்கப்பட வேண்டிய கொள்கை தேவைப்பட்டது. ஆனால், நீங்கள் அந்த கொள்கையை மாற்றினீர்கள். அவர்கள் (புலம்பெயர்ந்தோர்) விசாரணைக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதன் காரணமாக அவர்களில் ஏராளமான ஆண்கள், வயது வந்தோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். இப்போது திரும்பி பார்க்கும்போது உங்கள் நிர்வாகத்தின் தொடக்கத்தில் எடுத்த மெக்சிகோவில் தங்கியிருப்பதை தடுக்கும் முடிவுக்கு இப்போது வருத்தப்படுகிறீர்களா?” என்று கேட்டார்.
"எங்கள் நிர்வாகத்தின் தொடக்கத்தில், பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட சில மணி நேரத்தில், எங்களின் முதல் மசோதாவாக நமது குடியேற்ற நடைமுறைகளை சரிசெய்வதற்கானதாக இருந்தது" என்று கமலா ஹாரிஸ் பதிலளிக்கத் தொடங்கினார். என்றாலும், பிரெட் இடையிடையே உட்புகுந்து கொண்டே இருந்தார்.
“முதல் நாளில் இருந்தே இதுதான் உங்களின் முதல் கேள்வியாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்திருந்தோம். ஒரு தேசமாகவும் அமெரிக்க மக்களுக்காவும் இதுதான் எங்களின் முன்னுரிமை. பிரச்சினைகளை சரிசெய்வதில் எங்களின் கவனம் இருந்தது. முதல் நாளில் இருந்து தொடர்ந்து, புகலிட அமைப்பை சரிசெய்வது, அதிக அளவிலான ஆதாரங்களை வழங்குவது, அதிக நீதிபதிகளை பெறுவது, சட்ட விரோதமாக எல்லை தாண்டுவதை கட்டுப்படுத்த அபராதங்கள் விதிப்பது, அவற்றை அதிகரிப்பது, எல்லைகளுக்கு இடையேயான நுழைவு புள்ளிகளை சமாளிக்க வேண்டிய விஷயங்களைச் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை நாங்கள் செய்துள்ளோம்.
உண்மையில் எல்லைகளை வலுப்படுத்த அமெரிக்க காங்கிரஸின் மிகப் பழமையான உறுப்பினர்கள் சிலர் உட்பட இருதரப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் நாங்கள் பணியாற்றினோம். எல்லை மசோதா, எல்லைகளில் இன்னும் கூடுதலாக 1,500-க்கும் அதிகமான முகவர்களை நியமிக்க வழிவகுத்திருக்கும். அதனால்தான் எல்லை பாதுகாப்பு அமைப்பினர் அந்த மசோதாவை ஆதரித்தார்கள் என நம்புகிறேன். இது அமெரிக்காவுக்குள் அதிக அளவில் உள்நுழைவதைத் தடுத்திருக்கும், இது நாட்டின் அனைத்து பகுதிகள், நிலப் பரப்புகள், பின்னணிகளில் இருந்தும் மக்கள் பாதிக்கப்படுவதை தடுத்திருக்கும்" என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
மேலும், "அந்த மசோதாவைப் பற்றி ட்ரம்ப் தெரிந்து கொண்டார், அவர் பிரச்சினையை சரிசெய்வதற்கு பதிலாக அதனை அழிக்கச் சொன்னார்" என்று கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். “இன்னும் 20 நாட்களில் நடைபெற உள்ள தேர்தல், உண்மையில் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை உள்ள அதிபர் உள்ளாரா என்பதைத் தீர்மானிக்கும்" என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT