Published : 03 Oct 2024 04:15 AM
Last Updated : 03 Oct 2024 04:15 AM

பைடனின் மோசமான நிர்வாகம் 3-ம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறியதாவது: இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. இதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மோசமான நிர்வாகமே காரணம். நான் அதிபராக இருந்தபோது ஈரான் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுக்கு எப்போதும் பணநெருக்கடி இருந்தது. இதனால், ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் மட்டுமே அவர்கள் குறியாக இருந்தனர். ஆனால், கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆனது முதல் ஈரானுக்கு பணத்தை வாரி இறைத்தார். இதனால், அவர்கள் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கின்றனர்.

எனது ஆட்சி காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் போர் என்பது இல்லை. இந்த நாட்டை வழிநடத்த திறமையில்லாத இருவரால் உலகம் இப்போது மூன்றாம் உலகப் போரின் விளிம்புக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

ஐ.நா. பொதுச் செயலருக்கு எதிர்ப்பு: இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று எக்ஸ் தளத்தில், “இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கண்டிக்கவில்லை. தீவிரவாதிகள், கொலைகாரர்களுக்கு அவர் ஆதரவாக செயல்படுகிறார். இஸ்ரேல் மீதான தாக்குதலை கண்டிக்காத யாரும் எங்கள் நாட்டு மண்ணில் கால் வைக்கக் கூடாது” என பதிவிட்டுள்ளார். லெபனான் மீதான தாக்குதல் ஒருபுறம் இருக்க, காசா பகுதி மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 51 பேர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x