Published : 30 Aug 2024 12:04 PM
Last Updated : 30 Aug 2024 12:04 PM

‘அடுத்த கேள்வி ப்ளீஸ்’ - ட்ரம்ப்பின் இனவெறி தாக்குதலுக்கு கமலா ஹாரிஸ் பதில்!

கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ். இந்நிலையில், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், தன் மீது தொடுத்த இனவெறி தாக்குதலுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக இயங்கி வரும் கமலா ஹாரிஸ், முதல் முறையாக நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். மேலும், இதில் கொள்கை முடிவுகளை மாற்றிக் கொண்டது குறித்தும் விளக்கம் தந்துள்ளார்.

‘அரசியல் ஆதாயத்துக்காக கமலா ஹாரிஸ் ஆப்பிரிக்க அமெரிக்கராக மாறிவிட்டார்?’ என ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு “அதே பழைய மற்றும் சோர்வளிக்கும் விளையாட்டு” என கமலா ஹாரிஸ் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் பேச விரும்பாத அவர்,
‘அடுத்த கேள்விக்கு போகலாம்’ என்றார்.

“எனக்கு தெரிந்தவரை அவர் (கமலா ஹாரிஸ்) இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இந்திய பாரம்பரியத்தை அவர் ஊக்குவித்து வந்தார். சில வருடங்களுக்கு முன்புதான் அவர் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்று எனக்குத் தெரியாது. ​​இப்போது அவர் கறுப்பினத்தவராக அறியப்பட வேண்டும் என விரும்புகிறார். அவர் இந்தியரா அல்லது கறுப்பினத்தை சேர்ந்தவரா? என்பது எனக்கு தெரியாது” என சில வாரங்களுக்கு முன்பு ட்ரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நேர்காணலில் கமலா ஹாரிஸ், “நடுத்தர வர்க்கத்தை வலுப்படுத்தும் வகையில் என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வேன். அதற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அமெரிக்க மக்கள் புதிய பாதையில் முன் செல்ல விரும்புகிறார்கள் என என்னால் அறிய முடிகிறது. எனது கொள்கை சார்ந்த மிக முக்கியமான அம்சங்கள் மாறவில்லை என்றே நான் நினைக்கிறேன்” என கூறினார். வரும் 10-ம் தேதி ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

— Kamala HQ (@KamalaHQ) August 30, 2024

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x