Published : 23 Aug 2024 04:26 PM
Last Updated : 23 Aug 2024 04:26 PM
சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக, அமெரிக்க வாழ் இந்தியர்களும், இந்துக்களும் பிரச்சார நடவடிக்கைகளுடன் களம் இறங்கியுள்ளனர். கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ‘கமலா கே சாத்’ (கமலாவின் பக்கம்) என்ற டேக் லைனுடன் DesiPresident.com என்ற பெயரில் இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
"வரவிருக்கும் மாதங்கள், வரலாற்றை உருவாக்க நாம் ஒன்றாக அணிவகுத்து நிற்கும்போது உற்சாகமும் வாக்குறுதிகளும் நிறைந்தவையாக இருக்கும். உங்களின் பங்களிப்பும் உற்சாகமும் எங்களின் வெற்றிக்கு முக்கியம், உங்களுடனான இந்தப் பயணத்துக்காக இனிமேலும் காத்திருக்க முடியாது" என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் அமெரிக்கன் இம்பேக்ட் ஃபண்ட் அமைப்பின் தனது ‘தேசி பிரெசடென்ட்’டுக்காக ‘கமலா கே சாத்: வோட் ஃபார் கமலா’ என்ற டேக் லைனுடன் டி-சர்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளத்திலும் விரைந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தி முழக்க வாசகங்கள் இடம்பெறுவது இது முதல் முறை அல்லை. கடந்த 2016 தேர்தலின் போது, டொனால்டு ட்ரம்பின் பிரச்சாரத்தில் ‘அப் கி பார் ட்ரம்ப் சர்கார்’ என்ற முழக்கம் பயன்படுத்தப்பட்டது. பிரச்சாரத்துக்கான பிற நடவடிக்கைகளுடன் இந்தியன் அமெரிக்கன் இம்பேக்ட் ஃபண்ட் அமைப்பு, தொலைப்பேசி வழியாக வாக்காளர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க ‘கமலா கே சாத்’ என்ற மெய்நிகர் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கான நிகழ்வில், இந்தியன் அமெரிக்கன் காங்கிரஸைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது.
மேலும் அந்த அமைப்பு, "இந்தியன் அமெரிக்கன் இம்பேக்ட் ஃபண்ட் கமலா தேவி ஹாரிஸை ஆதரிக்கிறது. முதல் இந்திய அமெரிக்க தலைவரைத் தேர்ந்தெடுக்க நாங்கள் தெற்காசிய வாக்காளர்களை அணி திரட்டுகிறோம். கமலா ஹாரிஸ் எங்களின் மதிப்பு மற்றும் சமூகத்துக்காக நிற்கிறார்" என்று தெரிவித்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான 59 வயது கமலா ஹாரிஸ் ஒரு கலப்பு பெற்றோருக்கு பிறந்தவர். அவரின் தாயார் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர், தந்தை ஜமைக்கா நாட்டில் இருந்து குடிபெயர்ந்தவர்.
இந்துக்கள் ஆதரவு: அதேபோல், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள சில இந்துக்கள் ஒன்றிணைந்து ‘இந்துக்கள் ஃபார் கமலா ஹாரிஸ்’ என்ற குழுவை உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து குழுவை உருவாக்கிய உறுப்பினர்கள் கூறுகையில், "அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக கமலா தேவி ஹாரிஸை தேர்ந்தெடுப்பதற்காக இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. நாம் அவரின் வெற்றிக்கு கட்டாயம் உதவ வேண்டும். இது அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகுக்கு சிறந்தது. மாற்று வேட்பாளரான ட்ரம்ப் ஒரு பேரழிவு. வெற்றிக்கு மிக எளிமையான வழியொன்று உள்ளது. எந்தவிதமான மாறுயோசனை இன்றி கமலா ஹாரிஸின் நிலைப்பாடு மற்றும் அவர் வழங்கும் தீர்வுக்காக அவருக்கு ஆதரவு தெரிவியுங்கள்" என்று தெரிவித்தனர்.
இந்த குழுவினர், அதிபர் தேர்தலில் இந்துக்கள் வாக்களிக்க வேண்டும், கமலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களின் வீடுகளுக்கு முன்பு குறியீடுகளை வைக்க வேண்டும், அவருக்கு ஆதரவளிக்க நன்கொடைகள் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT