Published : 19 Jul 2024 11:33 AM
Last Updated : 19 Jul 2024 11:33 AM

“ட்ரம்ப் ஒரு ஹீரோ, கிளாடியேட்டர்” - WWE வீரர் ஹல்க் ஹோகன் புகழாரம்

வாஷிங்டன்: மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற WWE வீரர் ஹல்க் ஹோகன், “என்னுடைய ஹீரோ, கிளாடியேட்டர் ட்ரம்ப் உதவியுடன் அமெரிக்காவை மீட்போம். அவர் ஒரு உண்மையான அமெரிக்கர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. காதில் காயத்துடன் தப்பித்த அவர், அதன் பிறகு முதல்முறையாக மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பிரபல முன்னாள் WWE வீரர் ஹல்க் ஹோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ஹல்க் ஹோகன் பேசியதாவது: “நம்முடைய தலைவர், என்னுடைய ஹீரோ, கிளாடியேட்டர் ட்ரம்ப் உதவியுடன் அமெரிக்காவை மீட்போம். அவர் ஓர் உண்மையான அமெரிக்கர். ஆனால் கடந்த வாரம் நடந்த சம்பவத்தில் என்னுடைய ஹீரோவை அவர்கள் கொல்ல முயற்சித்ததன் மூலம் அமெரிக்காவின் அதிபரை அவர்கள் கொலை செய்ய துணிந்திருக்கின்றனர். ‘ட்ரம்ப்-ஓ-மேனியா’ மீண்டும் ஆட்சி செய்யட்டும், ‘ட்ரம்ப்-ஓ-மேனியா’ மீண்டும் அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்றட்டும்” என்று ஹல்க் ஹோகன் பேசினார்.

ஹல்க் ஹோகன் ட்ரம்ப் குறித்து பேசும்போது சுற்றி இருந்த கூட்டம் ‘யுஎஸ்ஏ.. யுஎஸ்ஏ' என்று முழக்கமிட்டது. முன்னதாக மேடைக்கு வந்த ஹல்க் ஹோகன் தான் அணிந்திருந்த சிவப்பு நிற டீசர்ட்டை கிழிந்தெறிந்தார். அதற்கு உள்ளே அவர் அணிந்திருந்த கறுப்பு நிற டீசர்ட்டில் ‘ட்ரம்ப்’ ‘வேன்ஸ்’ என்று எழுதியிருந்தது. இப்படி டீசர்ட்டை கிழிப்பது WWE போட்டிகளில் ஹல்க் ஹோகனின் பிரபலமான அடையாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (78) போட்டியிட உள்ளார். இதற்காக இப்போதே அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 13-ம் தேதி அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மேத்யூவை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x