Published : 04 May 2024 08:57 PM
Last Updated : 04 May 2024 08:57 PM

நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு வரைபடத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் - இந்தியா எதிர்வினை

காத்மாண்டு: சர்ச்சைக்குரிய லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி பகுதிகள் அடங்கிய வரைபடத்தை இணைத்து புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது நேபாளம். இவை செயற்கையான விரிவாக்கம் என்றும், சாத்தியமற்றது என்றும் ஏற்கெனவே தெரிவித்திருந்த இந்தியா, இதனால் எந்த யதார்த்தமும் மாறி விடாது என்று எதிர்வினையாற்றி இருந்தது.

இது குறித்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நேபாள அரசின் தகவல் தொடர்பு அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான ரேகா சர்மா, "பிரதமர் புஷ்பகமல் தஹால் பிரசந்தா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை நாட்டின் புதிய 100 நோட்டில் அச்சிட முடிவெடுக்கப்பட்டது. ஏப்ரல் 25 மற்றும் மே 2-ம் தேதிகளில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டின் மறு வடிவமைப்பு மற்றும் அதன் பின்னணியில் அச்சிடப்பட்ட பழைய வரைபடத்தை மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2020, ஜூன் 18-ம் தேதி நேபாளம் அதன் அரசியல் அமைப்பை திருத்துவதன் மூலம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் அரசியல் வரைபடத்தைப் புதுப்பிக்கும் பணியை நிறைவு செய்தது. இதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியது. நேபாளத்தின் பிராந்திய எல்லையை நீட்ட கோரும் செயற்கை விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறும்போது, "நான் அந்த அறிக்கையைப் பார்த்தேன். அதனை முழுமையாக இன்னும் பார்க்கவில்லை.என்றாலும் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது. நேபாளத்துடன் எல்லைகள் குறித்த விவாகாரத்தில் இந்தியா விவாதித்து விரிவான தளத்தில் விவாதித்து வருகிறது. இந்த நேரத்தில் நேபாளத்தின் தரப்பில் இருந்து தன்னிச்சையாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தரப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கள யதார்த்தத்தில் எந்த மாற்றமும் நிகழந்து விடாது" என்று தெரிவித்துள்ளார்.

லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகியவை இந்தியா தனது பகுதியாக பராமரித்து வருகிறது. இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம், பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுடன் சுமார் 1850 கி.மீ. பரப்பளவு எல்லைப் பகுதியை நேபாளம் பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x