Published : 30 Apr 2024 07:02 AM
Last Updated : 30 Apr 2024 07:02 AM

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்பு காலிஸ்தான் ஆதரவு கோஷம்

கோப்புப்படம்

புதுடெல்லி: கனடாவில் சீக்கிய மத நிறுவன நாள் கொண்டாட்டத்தின்போது அந்நாட்டு பிரதமர் முன்னிலையில் காலிஸ்தானுக்கு ஆதரவாக சீக்கியர்கள் முழக்கம் எழுப்பினர்.

கடந்த 1699-ம் ஆண்டு சீக்கிய மதம் நிறுவப்பட்டது. இந்த நாள் சீக்கிய புத்தாண்டாக (வைசாகி) ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் வைசாகி கடந்த 13-ம் தேதி கொண்டாடப்பட்டது.

சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு கனடாவின் டொரன்ட்டோ நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆன்டாரியோ சீக்கியர்கள் மற்றும் குருத்வாரா கவுன்சில் (ஓஎஸ்ஜிசி) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான கனடாவாழ் சீக்கியர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பங்கேற்றார். அவர் பேசுவதற்காக மேடையை நோக்கி புறப்பட்டபோது, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என உரத்த குரலில் முழக்கம் எழுப்பினர். அவர் மேடைக்கு வந்து பேசத் தொடங்கும் வரை இந்த கோஷம் தொடர்ந்தது. அப்போது என்.டி.பி. தலைவர் ஜக்மீத் சிங் மற்றும் டொரன்ட்டோ நகர மேயர் ஒலிவியா சவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

உரிமைகளை பாதுகாக்க உறுதி: இந்நிகழ்ச்சியில் ட்ரூடோ பேசும்போது, “கனடாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக பன்முகத்தன்மை விளங்குகிறது. இங்கு வசிக்கும் சீக்கியர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு உறுதியுடன் உள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பீரே பாய்லீவ்ரே மேடைக்கு சென்ற போதும்,காலிஸ்தானுக்கு ஆதரவாக சீக்கியர்கள் முழக்கம் எழுப்பினர். அவர் பேசத் தொடங்கும் வரை இந்த கோஷம் ஒலித்தது.

இந்திய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உறவை பாதிக்கும்: இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கனடா நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம் அனுமதிக்கப்பட்டதற்காக அந்நாட்டு துணைத் தூதரை அழைத்துகண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு கனடா இடம் அளிக்கிறது என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

இதுபோன்ற செயல்பாடுகள் இந்தியா-கனடா இடையிலான உறவை பாதிப்பது மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x