Published : 14 Aug 2014 10:00 AM
Last Updated : 14 Aug 2014 10:00 AM

சைபீரிய காட்டுக்குள் சிக்கிய சிறுமியை மீட்க உதவிய நாய்க்குட்டி

ரஷ்யாவின் சைபீரிய காட்டில் சிக்கிக் கொண்ட 3 வயது சிறுமியை, அவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியின் உதவியுடன் ராணுவ வீரர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர் 11 நாட்களுக்குப் பின்பு மீட்டனர்.

ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் அமைந்துள்ள சாகாவைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் வசிப்பவர் ரோடியான். இவரது 3 வயது மகள் கரீனா சிகிடோவா, தனது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றார். வீட்டின் அருகே இருந்த டாய்கா காட்டுப்பகுதிக்குள் சென்ற அச்சிறுமி, சிறிது நேரத்தில் திரும்பி வர வழி தெரியாமல் சிக்கிக்கொண்டார்.

கரடிகளும், நரிகளும் அதிகமுள்ள அந்த காட்டில் சிறுமி உயிர் பிழைத்திருப்பது கடினம் என்பதால், அனைவரும் நம்பிக்கை இழந்திருந்தனர். எனினும், சிறுமியைத் தேடும் பணியை தொடர்ந்து மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், காட்டுக்குள் அலைந்து திரிந்த சிறுமியுடன் இருந்த நாய்க்குட்டி அவரை விட்டு பிரிந்தது.

சிறுமி காணாமல் போய் 9 நாட்கள் ஆன நிலையில், நாய்க்குட்டி மட்டும் எப்படியோ காட்டிலிருந்து தப்பித்து சிறுமியின் வீட்டுக்குச் சென்றுவிட்டது. பின்னர் நாய்க்குட்டியின் உதவியுடன் கரீனாவை மீட்க ராணுவ வீரர்கள் அடங்கிய மீட்புக்குழு காட்டுக்குள் சென்றது. தான் கரீனாவை விட்டுப் பிரிந்த இடம் வரை மீட்புக் குழுவினரை நாய்க்குட்டி அழைத்துச் சென்றது. அப்பகுதியில் தீவிரமாக தேடுதல் பணியை மீட்புக்குழுவினர் மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, புதர் ஒன்றில் புற்களை படுக்கைப்போல செய்து கரினா அமர்ந்திருந்ததை மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர். மிகவும் பலவீனமாக காணப்பட்ட கரீனாவை மீட்டு மருத்துவமனையில் மீட்புக் குழுவினர் சேர்த்தனர். காலில் லேசான சிராய்ப்புக் காயங்களைத் தவிர வேறு எந்த பாதிப்புமின்றி சிறுமி மீட்கப்பட்டாள்.

காட்டில் சிக்கிக்கொண்ட 11 நாட்களிலும் அங்கு கிடைத்த பழங்களை சாப்பிட்டும், ஆற்றின் தண்ணீரைக் குடித்தும் சிறுமி உயிர் பிழைத்துள்ளாள். மிகவும் குளிர் பிரதேசமான சாகாவில், காட்டுக்குள் சிக்கிய சிறுமி 11 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x