Published : 16 Jan 2024 11:11 AM
Last Updated : 16 Jan 2024 11:11 AM

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: அயோவா மாகாண பின்னடைவைத் தொடர்ந்து அறிவிப்பு

விவேக் ராமசாமி | கோப்புப்படம்

வாஷிங்டன்: 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.

இது குறித்து அவர், “நான் இன்றிரவு இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். இது கடுமையாகவே இருக்கிறது. ஆனாலும் ஏற்கிறேன். இன்று மக்களை ஆச்சர்யப்படுத்தும் முடிவை எதிர்பார்த்தோம். அது கிட்டவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னாள் அதிபர் ட்ரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி, தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர். இதில் அயோவா தேர்தல் மூலமாக தனது வெற்றிக் கணக்கைத் துவக்கியுள்ளார் ட்ரம்ப்.

அயோவா தேர்தலில் 51.9 சதவீத வாக்குகளுடன் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ப்ளோரிடா ஆளுநர் ரான் டேசாண்டிஸ் 20.7 சதவீத வாக்குகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறார். தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி 19 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். விவேக் ராமசாமி 7.7 சதவீத வாக்குகளும், அர்கான்ஸஸ் முன்னாள் ஆளுநர் அஸா ஹட்ஷின்சன் 0.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்தப் பின்னடைவினைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதாகும் விவேக் ராமசாமி ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம்பெற்ற அவர், தற்போது தொழில்முனைவோராக உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x