Published : 20 Dec 2023 09:43 AM
Last Updated : 20 Dec 2023 09:43 AM

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ட்ரம்ப் தகுதி நீக்கம்: கொலராடோ நீதிமன்றம் உத்தரவு

கொலராடோ: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதன்மைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தகுதி நீக்கம் செய்து கொலராடோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று 4 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தடியடியும் நடத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் மூலம் தாக்கியதையடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், அதிபர் பதவியில் தோல்வியுற்ற பின்னர் வெள்ளை மாளிகையை காலி செய்த டொனால்ட் ட்ரம்ப் முக்கிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்கச் சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவ்வாறாக ஒப்படைக்காமல் 'க்ளாஸிஃபைட் டாக்குமென்ட்ஸ்' என்றழைக்கப்படும் மிக முக்கியமான ஆவணங்களை ட்ரம்ப் எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க கேப்பிட்டல் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தேசத்துரோகத் தாக்குதல் குற்றத்துக்காக ட்ரம்ப் வரவிருக்கும் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொலராடோ நீதிமன்றம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கூடுதலாக, முன்னாள் அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்கு தகுதியற்றவர் என்றும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற நடவடிக்கையை எதிர்கொள்ளும் முதல் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதரவாளர்களைத் திரட்டி அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவோர் பதவியில் இருக்க முடியாது என்பது அமெரிக்க அரசியலமைப்பின் விதி. இந்த விதி மிகவும் அரிதாகபவே பயன்படுத்தப்படும். இந்த விதியை நீதிமன்றம் பயன்படுத்தி இவ்வுத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ட்ரம்பின் தேர்தல் பிரச்சார செய்தித் தொடர்பாளர் இந்த முடிவை முற்றிலும் தவறானது என்றும், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பேலட் (Ballot) தகுதி நீக்கம் என்றால் என்ன? பேலட் தகுதி நீக்கத்தின்படி கொலராடோவில் அவரை அதிபர் வேட்பாளராகப் பட்டியலிடுவது தேர்தல் சட்டங்களின்படி தவறானதாகும். வரும் 2024 மார்ச் 5ஆம் தேதி குடியரசுக் கட்சி அதிபர் தேர்தலுக்கான ப்ரைமரி எலக்‌ஷன் எனப்படும் முதன்மைத் தேர்தலை நடத்தவுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவால் ட்ரம்பை அதிபர் வேட்பாளராக ஆதரித்து வாக்குகள் பதிவானாலும் கூட அவை எண்ணப்படாது. அதேவேளயில் இந்த உத்தரவு முதன்மைத் தேர்தலுக்கு மட்டுமே கொலராடா நீதிமன்ற உத்தரவு பொருந்தும். ஒருவேளை மேல்முறையீட்டில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக தீர்ப்பு அமையாவிட்டால் அது அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x