Published : 10 Jul 2014 10:00 AM
Last Updated : 10 Jul 2014 10:00 AM
முதல் உலகப் போரின் 100-வது ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை அனுசரித்தது. அப்போது அந்தப் போரில் ஈடுபட்ட இந்திய வீரர்களுக்கும் அவர்களின் பங்களிப்புக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
முதல் உலகப் போரின் 100-வது ஆண்டு அனுசரிப்பு நிகழ்ச்சி 'அமைதியைக் கட்டமைக்க போரிலிருந்து கற்றுக் கொள்ளுதல்' எனும் தலைப்பில் ஐ.நா. சபையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்த நிகழ்வை இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளின் உதவியுடன் ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதிகளான பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் ஏற்பாடு செய்திருந்தன.
ஐ.நா.வின் உறுப்பு நாடுகளை ஒருங்கிணைத்து, தூதரக நட்பு மற்றும் பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றாலேயே நாடுகளுக்கிடையே சமரசம் ஏற்படுத்த முடியும் என இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி- மூன் கூறியதாவது:
மனித வரலாற்றில் மிகவும் மோசமான யுத்தம் ஒன்றில் கொல்லப்பட்ட, படுகாயமடைந்த எத்தனையோ லட்சக்கணக்கான மக்களை இன்று நாம் நினைவு கூர்கிறோம். முதல் உலகப் போரின் முடிவின்போது அனைத்துப் போர்களின் முடிவாக இது இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. ஆனால் அன்று சிந்தப்பட்ட ரத்தத்தில் இருந்து உலகில் போட்டிகளையும் போர்களையும் எப்படிச் சமாளிப்பது என்பதை அறிந்து கொண்டோம்.
பலரும் சச்சரவுகளைத் தூண்டி விடுபவர்களாகவே இருக்கிறார்கள். வரலாற்றில் இருந்து பாடங்கள் கற்ற பின்னும், பல நாடுகளும் அடக்கு முறையையே தேர்ந்தெடுக்கின்றன என்றார்.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரநிதி அசோக் முகர்ஜி கூறும்போது, "முதல் உலகப் போரில் இந்தியர்கள் பலர் ராணுவ வீரர்களாகவும், மருத்துவ சேவகர்களாகவும் மட்டுமல்லாமல், தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். இந்தியா ஒரு விடுதலை பெற்ற நாடாக எழுவதற்கும் இந்தப் போர் எங்களுக்கு உதவியது. இதன் விளைவுதான் இந்திய ராணுவத்தின் தோற்றமாகும். இந்தப் போரில் பிரிட்டிஷ் படைகளுக்கு அடுத்து இந்தியப் படைகள்தான் அதிகம் சேதமடைந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதல் உலகப் போர் குறித்த குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. அந்தப் போரில் பணியாற்றிய வீரர்களின் கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகளும் வாசிக்கப்பட்டன. கிராமி விருது வென்ற ஆர்பியஸ் சேம்பர் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT