Published : 29 Oct 2023 03:53 AM
Last Updated : 29 Oct 2023 03:53 AM
நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருவதால் எகிப்தின் ரஃபா எல்லை வழியாக நிவாரண பொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
போர் குறித்து விவாதிக்க ஐ.நா. பொது சபை கடந்த 26-ம் தேதி கூடியது. இதில் ஜோர்டான் சார்பில் 3 பக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இத்தீர்மானத்தை 40 நாடுகள் முன்மொழிந்தன. ஜோர்டானின் தீர்மானத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லை.
ஹமாஸ் தீவிரவாதிகளிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை விடுவிப்பது குறித்தும் தீர்மானத்தில் எவ்வித குறிப்பும் இல்லை.
இந்த அம்சங்களை சேர்ப்பதற்காக தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக முதலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆதரவளித்து வாக்களித்தன. ஆனால் போதிய வாக்குகள் இல்லாததால் தீர்மானத்தில் திருத்தம் செய்ய முடியவில்லை.
இதைத் தொடர்ந்து ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானம் மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், இலங்கை, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 120 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, ஆஸ்திரியா உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT