Published : 05 Jul 2014 08:20 AM
Last Updated : 05 Jul 2014 08:20 AM
ஐ.நா. அமைதிப் படைக்கான பட்ஜெட் செலவைக் குறைக்க பயனுள்ள யோசனைகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
ஐ.நா. சார்பில் சூடான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 16 அமைதி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட அமைதிப் படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களின் அடுத்த 4 ஆண்டுகளுக்கான செலவு தொடர்பான பட்ஜெட் ஐ.நா. சபையின் கடும் விவாதத்துக்கு உள்ளாகி கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா. பட்ஜெட்டில் 28 சதவீதத்தை அமெரிக்கா அளிக்கிறது. ஜப்பான் 11 சதவீதமும் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தலா 7 சதவீத பங்களிப்பையும் அளிக்கின்றன.
இந்நிலையில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றும் வீரர் களுக்கு மாதாந்திர செலவுத் தொகையை ரூ.72,316-ல் இருந்து ரூ.1,053,67 ஆக உயர்த்த வேண்டும் என்று வீரர்களை பங்களித்து வரும் 77 வளரும் நாடுகள் கோரிக்கை விடுத்தன.
இதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஏற்க மறுத்தன. அதிக தொகை உயர்த்தப்பட்டால் பட்ஜெட் செலவு உயரும் என்று அந்த நாடுகள் சுட்டிக் காட்டின.
நீண்ட விவாதத்துக்குப் பிறகு இப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்பட்டது. இதன்படி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.79,653-ம் மூன்றாம் ஆண்டில் ரூ.81,613-ம், நான்காம் ஆண்டில் ரூ.84,283-ம் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்தியா யோசனை
இந்நிலையில் அதிகரித்து வரும் பட்ஜெட் செலவைக் குறைக்க ஐ.நா. சபைக்கு பயனுள்ள ஆலோ சனைகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா அறிவித் துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் குமார் முகர்ஜி கூறியிருப்பதாவது:
ஐ.நா. அமைதிப் படைக்கு வீரர்களை அனுப்பும் நாடுகளும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. எனினும் சர்வதேச அமைதிக்காக அந்த நாடுகள் வீரர்களை தொடர்ந்து அனுப்பி வருகின்றன.
ஐ.நா. சபையின் அமைதிப் படைக்கான செலவுகளைக் குறைக்க பயனுள்ள யோசனை களை வழங்க இந்தியா தயாராக உள்ளது.
இந்தியாவின் கடந்த கால அனுபவங்கள் மூலம் செலவு குறைப்புக்கு வழிகாட்ட முடியும். இதன் மூலம் ஐ.நா. சபையின் நிதிச் சுமை கணிசமாகக் குறையும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT