Published : 27 Jul 2014 11:20 AM
Last Updated : 27 Jul 2014 11:20 AM

போர் நிறுத்தத்தை 24 மணி நேரம் நீட்டித்தது இஸ்ரேல்

ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

துவக்கத்தில் மறுப்பு வெளியிட்ட ஹமாஸ், பிறகு தங்கள் தரப்பிலும் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ஒப்புக்கொண்டது.

பலி 1000-ஐ எட்டியது

கடந்த 19 நாட்களாக நடை பெற்றுவரும் மோதலில் 1050 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 6,000 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலிய தரப்பில் 43 படைவீரர்களும், 2 சிவிலியன்களும், தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியும் உயிரிழந்தனர்.

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசியதை அடுத்து இஸ்ரேல் கடுமையான பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. காஸா பகுதியை குறிவைத்து ராக்கெட் குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

முதலில் வான் வழியாக தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல், பின்னர் தரை வழியாகவும் தொடர்ந்தது. சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை. நடுவே ஒருநாள் 5 மணி நேரம் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

அமைதி வேண்டுமென்றால்…

பாலஸ்தீன பகுதியில் அமைதி நிலவ வேண்டுமென்றால் பாலஸ்தீனர்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். இஸ்ரேல் பகுதி மீது எந்த தாக்குதலும் நடத்தக்கூடாது என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. தற்காத்துக் கொள்ளவே தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதே இஸ்ரேலின் ஒரே பதிலாக உள்ளது.

இதன் தொடர்ச்சியாக. இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தியது. இதையடுத்து 12 மணி நேரம் மட்டும் போரை நிறுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டது.

பதிலடி கொடுப்போம்...

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. கேட்டுக் கொண்டதற்கு இணங்க 12 மணி நேரத்திற்கு போரை நிறுத்தியுள்ளோம். இதை மீறி ஹமாஸ் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஏராளமான ராக்கெட் குண்டுகள் இஸ்ரேல் மீது வீசப்படுகின்றன. எனினும் 'அயர்ன் டோம்' பாதுகாப்பு அமைப்பு மூலம் அவை பெரும்பாலும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகிறது. தரை வழியாக நாங்கள் முன்னேறியுள்ள பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் ஏற்படுத்தியுள்ள சுரங்கங்களை அழித்து வருகிறோம் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கரையில் வன்முறை

இதனிடையே மேற்குக் கரை பகுதியில் வன்முறை வெடித் துள்ளது. இதில் இஸ்ரேல் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் 7 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரமல்லா, பெத்லஹேம் ஆகிய பகுதிகளில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே அதிகபட்சம் 7 நாட்களாவது போர் நிறுத்ததை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, கத்தார் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் பிரான்சில் நடைபெற்றது. எனவே விரைவில் மேலும் சில நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

நீட்டித்தது இஸ்ரேல்...

இந்தச் சூழலில், ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் சனிக்கிழமை இரவு அறிவித்தது.

இஸ்ரேல் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து 24 மணி நேரத்துக்கு தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், தமது ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஒப்புக்கொண்டது ஹமாஸ்

ஆனால், காஸா நிலைகளில் இருந்து இஸ்ரேலிய டேங்கர்கள் விலக்கிக்கொள்ளப் படாத நிலையில், மனிதநேய அடிப்படையிலான போர் நிறுத்தத்தில் எந்த பலனும் இல்லை என்று ஹமாஸ் தெரிவித்தது.

காஸாவில் பாலஸ்தீனர்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு சுதந்திரமாக திரும்பவும், உடல்களை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸுகள் சுதந்திரமாக செல்லவும் வழிவகுக்கபட வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியது. ஆரம்பத்தில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்ளதா ஹமாஸ் தரப்பு, பின்னர் ஒப்புக்கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x