Published : 22 Jul 2014 10:33 AM
Last Updated : 22 Jul 2014 10:33 AM

சர்வதேச நிபுணர்களை அனுமதிக்க வேண்டும்: உக்ரைன் கிளர்ச்சியாளர்களிடம் ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தல்

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்த சர்வதேச நிபுணர்களை அனுமதிக்க வேண்டும் என்று உக்ரைன் கிளர்ச்சியாளர்களிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை கிழக்கு உக்ரைன் பகுதியில் பறந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் உயிரிழந்தனர்.

கிளர்ச்சியாளர்கள்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என்று உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை மறுத்துள்ள கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் ராணுவத்தின் மீது பழிசுமத்தி வருகிறார்கள்.

விமானத்தின் உடைந்த பாகங்கள் சுமார் 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சிதறி விழுந்துள்ளன. இதில் பெரும் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியில் சர்வதேச நிபுணர்கள் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

உக்ரைன் அரசும் கிளர்ச்சியாளர்களும் சண்டை நிறுத்தத்தைக் கடைப்பிடித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்காது. இப்போது இச்சம்பவத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கப்படுகிறது. இதை அரசியலாக்க யாருக்கும் உரிமை இல்லை.

இருதரப்பினரும் உள்நாட்டுப் போரைக் கைவிட்டு அமைதி வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அதுதான் ரஷ்யாவின் விருப்பம். விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச நிபு ணர்கள் ஆய்வு நடத்த கிளர்ச்சி யாளர்கள் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 21 உடல்கள் மீட்பு

திங்கள்கிழமை காலை ஹ்ரபோவ் பகுதியில் உள்ளூர் மீட்புக் குழு வினரால் மீட்கப்பட்டு சாலை யோரத்தில் 21 உடல்கள் வைக்கப் பட்டிருந்தன. இந்த உடல்கள், ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட உடல்களுடன் எவ்வளவு விரை வில் சேர்க்கப்படும் என்பது தெரியவில்லை.

251 உடல்கள்

இதுவரை மொத்தம் 251 உடல் கள் மீட்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் அவசரகால சேவைத் துறை ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்துள்ளது. இதனிடையே, கிளர்ச்சியாளர் களின் தலைவர் அலெக்ஸாண்டர் போரோடாய், “தடயங்களை அழிக்கும் முயற்சியில் கிளர்ச்சி யாளர்கள் யாரும் ஈடுபடவில்லை. மலேசிய நிபுணர்கள் வரும்வரை உடல்கள் டோனெட்ஸ்க் நகரில்தான் வைக்கப்பட்டிருக்கும்” என்றார்.

நெதர்லாந்து நிபுணர்கள் ஆய்வு

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை நெதர்லாந்து நிபுணர் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

பலியானவர்களின் உடல்களை உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மீட்டு குளிர்சாதன வசதிகொண்ட ரயில் பெட்டிகளில் வைத்துள்ளனர். டோரஸ் ரயில் நிலையத்தில் அந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள் என்பதால் மீட்கப்பட்ட உடல்கள் ரயில் மூலம் நெதர்லாந்துக்கு அனுப்பப்படும் என்று உக்ரைன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x