Published : 07 Jun 2023 07:33 AM
Last Updated : 07 Jun 2023 07:33 AM

உக்ரைனில் முக்கிய அணை தகர்ப்பு; மக்கள் வெளியேற்றம் - ரஷ்ய படைகள் மீது குற்றச்சாட்டு

சாட்டிலைட் படம்

கீவ்: ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் உக்ரைனில் உள்ள 10 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956-ம் ஆண்டு 98 அடி உயரத்தில், 3.2 கி.மீ நீளத்தில் கக்கோவ்கா அணை கட்டப்பட்டது. இங்கு கக்கோவ்கா நீர்மின் நிலையமும் உள்ளது. கிரிமியன் தீபகற்ப பகுதி, ஜபோரிச்ஜியா அணுமின் நிலையம் ஆகியவற்றுக்கு இந்த அணையிலிருந்துதான் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது.

சோவியத் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையை ரஷ்ய ராணுவம் தகர்த்துவிட்டதாகவும், இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் 5 மணி நேரத்துக்குள் அபாய அளவை எட்டும் என கெர்சன் பகுதி ராணுவ நிர்வாகத் தலைவர் அலெக்சாண்டர் புரோகுதின் கூறியுள்ளார்.

இதனால் தெற்கு உக்ரைனின் கக்கோவ்கா பகுதியில் உள்ள 10 கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கெர்சன் ஆளுநர் தெரிவித்துள்ளார். மக்கள் தங்களின் முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்ல பிராணிகளுடன் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கக்கோவ்கா அணை சேதமடைந்துள்ளதால், 80 குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் வேகமாக குறைந்து வருவதால், ஜபோரிச்ஜியா அணுமின் நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆனால் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைன் அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது.

அணையின் ஒரு பகுதி குண்டு வீசி தகர்க்கப்பட்டதற்கு, ரஷ்ய மற்றும் உக்ரைன் படையினர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அணை சேதம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘‘ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு உக்ரைனில் உள்ள கக்கோவ்கா அணையை ரஷ்யா சேதப்படுத்தியிருப்பது, அந்நாட்டு படைகளை உக்ரைனின் அனைத்து பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. ஒரு மீட்டர் உக்ரைன் பகுதி கூட ரஷ்யாவிடம் இருக்கக் கூடாது. அதை அவர்கள் தீவிரவாத செயலுக்கு பயன்படுத்துவர்’’ என்றார்.

உக்ரைன் சென்றுள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கூறுகையில், ‘‘அணை சேதப்படுத்தப்பட்ட தகவலை கேள்விப்பட்டேன். அதன் பாதிப்புகள் குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது. உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவியதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதனால், ரஷ்ய படைகளை உக்ரைன் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x