காதலுக்காக பெற்றோரையும், ஊரையும் விட்டு ஓடி வந்தவர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கல்வி பெறுவதற்காக ஓடியவர்கள் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோமா?
தமிழக நிலச்சுவான்தார் குடும்பத்தைச் சேர்ந்த உசைன் நைனார் என்பவர் தம் ஊரான பழனியை விட்டு ஓடினார். உயர்கல்வி பெற்றவர்கள் விவசாயம் பார்க்க முன்வர மாட்டார்கள் என்பது அப்போதைய கருத்தாக இருந்துள்ளது. இதனால், சிறு வயதில் மதரஸாவில் பயின்ற உசைனை விவசாயம் பார்க்கும்படி அவரின் குடும்பத்தார் வலியுறுத்தி உள்ளனர்.
அவரின் பரம்பரையில் அப்போது எவரும் உயர் கல்வி கற்றிருக்கவில்லை. பெற்றோருக்குப் பயந்து 1920-ம் ஆண்டு வாக்கில் வீட்டை விட்டு வெளியேறி, உசைன் வந்து சேர்ந்த இடம், உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். இது தனது குடும்பத்தாருக்குத் தெரியவராமல் பல காலம், உசைன் ரகசியம் காத்துள்ளார்.
பல வருடங்களுக்குப் பின் தம் நண்பர்களுக்குக் கடிதம் மூலம் அளித்த தகவலால் உசைன் நைனாரின் குடும்பத்தினர் தகவல் அறிந்துள்ளனர். அலிகரில் அரபு மொழி மற்றும் சட்டத் துறையில் முதுகலைப் பட்டங்கள் பெற்ற உசைன், பல வெளிநாடுகளில் உயரிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
உசைனை சிறந்த கல்வியாளராக மாற்றிய கல்விச் சூழல், இன்றும் அலிகரில் நிலவுகிறது. உசைனின் அலிகர் கல்வி, தன் நான்காவது தலைமுறையை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் பயிலவும், பணியாற்றவும் அடித்தளம் வகுத்துள்ளது.
இவரது குடும்பத்தைச் சேர்ந்த அன்வர் நைனார், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் உசைனின் நிலச்சுவான்தார் குடும்பம் கல்வியில் உயரிய சமூக அந்தஸ்து பெற்றது. இன்று தமிழகத்தின் தென் மாவட்டப் பிரபலங்களில் உசைன் குடும்பமும் ஒன்று. அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் படித்த முதல் தமிழராக உசைன் நைனாரே இருக்கக்கூடும்
உசைன் குடும்பம் போல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த நலிந்த, லட்சக்கணக்கான குடும்பங்களில் நிகழ்ந்த நல்ல மாற்றங்களின் பின்னணியில் அவர்கள் அலிகர் பல்கலைக்கழகத்தில் பெற்ற கல்வி இருந்துள்ளது.
இன்றும் உ.பி. அல்லது பிஹார் மாநில கிராமங்களில் வாழ்வோர் குடும்பத்தில் ஒரு மாணவருக்கு இப்பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துவிட்டால் அவரது குடும்பமே அந்த ஊரை விட்டு அலிகருக்குக் குடியேறி விடுகிறது. தன் பிள்ளையின் கல்விக்காக பெற்றோர் தம் விளைநிலங்களைக் குத்தகைக்கு அளித்தும், விற்று விட்டும் அலிகரில் உள்ள தனியார் நிறுவனங்களில் காவலர் போன்ற சாதாரணப் பணிகளைச் செய்வதை இன்றும் பார்க்கலாம்.
மேற்கூறிய முக்கிய, பெரிய மாற்றங்களின் மூலகர்த்தாவாக இருப்பவர் சர்.சையது அகமது கான். இவர் அலிகர் பல்கலைக்கழகத்தை 1875-ல், ஆங்கிலோ ஓரியண்டல் முகம்மதன் கல்லூரி எனும் பெயரில் நிறுவினார்.
முகலாயர் ஆட்சிக் காலத்தில் ஆட்சி மொழியாக பெர்ஷியன் இருந்தது. ஆங்கிலேயர்கள் 1842-ல் அதை ஆங்கிலமாக மாற்றினர். ஆங்கிலத்துக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையை மாற்றி, ஆங்கிலம் கற்பதன் மூலம் முன்னேற முடியும் என்பதை சர்.சையது முஸ்லிம்களுக்கு உணர்த்தினார்.
முஸ்லிம் சமூகத்தை முன்னேற்ற வேண்டி சர்.சையது தொடங்கிய அலிகர் பல்கலைக்கழகத்தில் இந்துக்களும் படித்தனர். இதில் பட்டம் (வரலாறு) பெற்ற முதல் மாணவர் ஈஸ்வரி பிரசாத் எனும் ஓர் இந்து ஆவார். தொடக்கத்தில் இருந்தே இரு தரப்பினரும் கிட்டத்தட்ட சரிபாதியாகவே இருந்து வருகின்றனர். சர்.சையது குறித்து இந்திய வரலாற்றில் ‘அலிகர் இயக்கம்’ என்னும் பெயரில் பாடம் இடம் பெற்றுள்ளது
மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில், நாடு முழுவதிலும் தனியார் கல்வி நிலையங்கள் தொடங்கப்படும் வரை சுமார் 3000 தமிழர்கள் பயின்று வந்தனர். ஆனால், தற்போது தமிழர்கள் அதிகம் கற்பதில்லை என்பது வருத்தமான செய்தி.
இன்று சர்.சையது அகமது கானின் 202-வது பிறந்த நாள் ஆகும். அக்டோபர் 17, 1817-ல் டெல்லியில் பிறந்த இவர், மார்ச் 27, 1898-ல் மறைந்தார். இந்நாளில் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கும் நிர்வாகம், தன் நிறுவனரின் பிறந்த நாளை விமரிசையுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
அலிகர் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கல்வித் துறைகள் உள்ளன. இவற்றில் படித்து, பயன்பெற்று, உலகம் முழுவதிலும் பணியாற்றும் மாணவர்களாலும் அவர்களின் பெற்றோராலும் சர்.சையது அகமது கானின் 202-வது பிறந்த தினம் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
- முனைவர் எஸ்.சாந்தினிபீ, அலிகர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை இணைப்பேராசிரியர்.
WRITE A COMMENT