நாடகக் கலைஞராகவும், சிறந்த பாடகராகவும் விளங்கியவர் கே.பி. ஜானகி அம்மாள். இவர் 1917-ல் மதுரை திருநகரில் பிறந்தார். பழனியாபிள்ளை பாய்ஸ் கம்பெனியில் பாடகராக 12 வயதில் சேர்க்கப்பட்டார். வறுமைதான் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
வள்ளித் திருமண நாடகத்தில் வள்ளியாகவும் கோவலன் நாடகத்தில் கண்ணகி, மாதவி என இரு வேடங்களிலும் மிகச் சிறப்பாக நடித்தார். ‘வந்தே மாதரம்’, ‘பாரத சமுதாயம் வாழ்கவே’, ‘விடுதலை விடுதலை’ போன்ற பாடல்களைப் பாடி போராட்ட வீரர்களை உற்சாகப்படுத்தினார். விடுதலை போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஐந்துமுறை கைதாகி வேலூர் சிறைக்குச் சென்றுவந்தவர்.
1967-ல் மதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். துவரிமான் குத்தகை விவசாயிகளின் நிலமீட்புப் போராட்டத்தில் ஏர் பிடித்து நிலத்தில் இறங்கி உழுதார். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் திகைத்து நின்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் என்பதற்கான பட்டயத்தையும், பரிசளிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்து கடமையைச் செய்தேன், சன்மானம் எதற்கு? என்று முழங்கிய கே.பி.ஜானகி அம்மாள் 1992 மார்ச் 1-ம் தேதி காலமானார்.
WRITE A COMMENT