இந்தியத் திரைத்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதாசாஹேப் பால்கே. இவர் மகாராஷ்டிரா மாநிலம் த்ரயம்பகேஷ்வரில் 1870-ல்பிறந்தார். புகைப்படக் கலை, ஓவியம் குறித்து பரோடாவில் உள்ள கலா பவனில் 1890-ல் பயின்றார்.
அப்போது ‘கிறிஸ்துவின் வாழ்வு’ என்ற திரைப்படத்தைப் பார்த்ததும் இவருக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிகைகளை படித்தார். திரைப்படம் பார்ப்பதற்காகவே லண்டன் சென்று அங்கு சினிமா கொட்டகையில் வேலை பார்த்தார். எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் அவரே மேற்கொண்டார்.
இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’-வை 1913-ல் இயக்கி அவரே தயாரித்தார். இதன் மூலம் இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட 95 திரைப்படங்கள், 26 குறும்படங்கள் தயாரித்த தாதாசாஹேப் பால்கே 74 வயதில் 1944 பிப்ரவரி 16-ம் தேதி காலமானார். திரைத்துறை சாதனையாளர்களுக்கு இந்திய அரசு 1969 முதல் தாதாசாகேப் பால்கே விருது வழங்கி வருகிறது.
WRITE A COMMENT