ஆன்மிக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1878-ல் பிறந்தார். பள்ளி பருவத்திலேயே சிறந்த ஓவியராகவும், பியானோ வாசிப்பதில் வல்லவராகவும் இருந்தார். விவேகானந்தரின் ‘ராஜயோகம்’ நூலைப் படித்ததன் மூலம் கிழக்கத்திய நாடுகளின் யோகமுறை குறித்து அறிந்தார். தன்னைப் போன்ற ஆன்மிகத் தேடல் கொண்டவர்களை இணைத்து ‘தி நியூ ஐடியா’ என்ற அமைப்பை உருவாக்கினார். 36-வது வயதில் புதுச்சேரிக்கு வந்தார். விடுதலை போராட்ட வீரரும் தத்துவ ஞானியுமான அரவிந்தருடன் இணைந்து ‘ஆர்யா’ என்ற இதழைத் தொடங்கினார். 1926-ல் அரவிந்தரின் பெயரில் ஆசிரமம் நிறுவினார்.
இந்திய இளைஞர்களுக்குப் புதுமையான முறையில் கல்வி வழங்க வேண்டும் என்ற அரவிந்தரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக கல்வி மையங்களைத் தொடங்கினார். இவரது ஆன்மிக பணி காரணமாக ‘அன்னை’ என்று போற்றப்பட்டார். உடற்கல்வி நிலையங்கள், மதர்ஸ் பன்னாட்டு பள்ளி, அரவிந்தோ பன்னாட்டு பல்கலைக்கழகம் இவரது முயற்சியால் தொடங்கப்பட்டன. ஆசிரமத்தின் கிளை டெல்லியிலும் தொடங்கப்பட்டது. மனிதகுல ஒருமைப்பாட்டை உருவாக்கும் நோக்கில் பாண்டிச்சேரிக்கு அருகே ‘ஆரோவில்’ நகரம் அமைக்கும் திட்டத்தை 1968-ல் தொடங்கிவைத்த அன்னை 1973 நவம்பர் 17-ம் தேதி காலமானார்.
WRITE A COMMENT