உலகப் புகழ்பெற்ற தொல் தாவரவியல் விஞ்ஞானி பீர்பல் சாஹ்னி. இவர் மேற்கு பஞ்சாபில் உள்ள பெஹ்ரா கிராமத்தில் 1891 நவம்பர் 14-ம் தேதி பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், கேம்பிரிட்ஜ் இமானுவேல் கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்றார். லண்டனில் புகழ்பெற்ற தாவரவியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் செவார்டு வழிகாட்டுதலில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இந்தியா திரும்பி, கோண்ட்வானா பகுதியில் உள்ள தாவரங்கள் குறித்து ஆய்வு செய்தார். இளம் வயதிலேயே தாவரவியல் வல்லுநராகப் புகழ்பெற்றார். நிலவியல், மானுடவியல் ஆய்வுகளுக்கு இந்த ஆய்வு முக்கியமானதாக அமைந்தது. உறையில்லாத வித்துத் தாவரங்கள் குறித்த ஆய்வுசெய்து 1919-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். லக்னோ பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட தாவரவியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார். தாவரவியல், தொல் தாவரவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்காக 1929-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. லக்னோவில் 1946-ல் தொடங்கப்பட்ட தொல் தாவரவியல் கல்வி மையத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார். இந்திய அறிவியல் அகாடமியின் தலைவராகவும், இந்திய அறிவியல் காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டார்.
WRITE A COMMENT